என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் தேன், கிழங்கு, மூலிகை செடிகள் சேகரிக்க அனுமதியுடன் அடையாள அட்டை -கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை மனு
- கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பழங்குடி மக்கள் மனு கொடுத்தனர்.
- அடையாள அட்டை வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், போச்சம்பள்ளி ஒன்றிங்களுக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி, பூமாலை நகர், காரகுப்பம், ஜவுக்குபள்ளம், எம்ஜிஆர் நகர், பழனிஆண்டவர் நகர், கொத்தப்பள்ளி, காளிக்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் (இருளர்) வசித்து வருகின்றனர். இவர்கள் வனப்பகுதியில் தேன், கிழங்கு, கீரைகள், பழங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை தங்களது வாழ்வாதாரமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் சிறு வனத்திற்குள் சென்று தேன், கிழங்கு, மூலிகை செடிகள் சேகரிக்க சென்று வர ஏதுவமாக அனுமதி அட்டை வழங்க வேண்டுமென என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இருளர் இன மக்கள் 150க்கும் மேற்பட்டவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தேனி, வால்பாறை, தர்மபுரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்கள், சிறு வனத்திற்கு சென்று வர அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாவட்டத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. கடந்த 2019ம் ஆண்டு சிறு வன மகசூல் மீதான முகாமில் மனு அளித்தோம். அதற்கும் இதுவரை பதிலளிக்கவே இல்லை.
எனவே நாங்கள் வனப்பகுதிக்கு செல்ல அனுமதி அட்டை வழங்கி, சிறு வன மகசூல் எடுத்து சீத்தாக்காய், புளி, முலிகைகள் எடுக்க அனுமதியுடன், அடையாள அட்டை வழங்க வேண்டும். இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்றனர்.






