search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடை தயாரிப்பு இந்தியாவை நோக்கி  திரும்பும்  சீன ஆர்டர்கள்
    X

    ஆடை தயாரிப்பு இந்தியாவை நோக்கி திரும்பும் சீன ஆர்டர்கள்

    • பஞ்சு விலை நிலையாக இருப்பதால் நூல் விற்பனையும், ஜவுளி வர்த்தகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
    • நூல் வர்த்தகமும் சிறப்பாக அமையும் என நூற்பாலைகள் நம்பிக்கை அடைந்துள்ளன.

    திருப்பூர் :

    கடந்த ஆண்டு அதிக விலைக்கு பருத்தி விற்கப்பட்டதால், கூடுதல் விலையை எதிர்பார்க்கும் விவசாயிகள், பருத்தியை சந்தைக்கு கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். நல்ல விலை கிடைக்குமென எதிர்பார்த்து, விவசாயிகள் இருப்பு வைத்துள்ளதால் விலை வீழ்ச்சி அடையாமல் சீராக இருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நூல் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. பஞ்சு விலை நிலையாக இருப்பதால் நூல் விற்பனையும், ஜவுளி வர்த்தகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

    இது குறித்து, ஐ.டி.எப்., கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:- சர்வதேச சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பருத்தி விலை அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இழந்த நூல் மற்றும் ஆடை ஏற்றுமதி சந்தையை, சாதகமான பருத்தி விலையில் மீண்டும் கைப்பற்ற துவங்கியிருக்கிறோம். செப்டம்பர்-அக்டோபர், மாதங்களில் சரிந்த நூல் ஏற்றுமதி டிசம்பர் மாதம் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.

    ஒரு மாதமாக, இந்திய பருத்தி விலை ஸ்திரத்தன்மையை அடைந்து உள்ளதால் உள்நாட்டு நூல் மற்றும் ஆடை வியாபாரமும் உயரத் துவங்கியுள்ளது. அமெரிக்காவில் சாகுபடி செய்யப்படும் பருத்தியின் அளவு மற்றும் மகசூல் விபரம், ஏப்ரல் மாதம் தெரிய வரும். அதுவரை பருத்தி வர்த்தகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.

    வெளிநாட்டு சில்லரை விற்பனை கடைகளில் சரக்கு குறைந்து புதிய ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளது. 'பிராண்டட்' நூலிழை மற்றும் ஆடைகளுக்கான ஆர்டர்கள் வரத் துவங்கியுள்ளன. சீனாவில் மீண்டும் கொரோனா பரவியுள்ள நிலையில் அந்த நாட்டுக்கான ஆர்டர்கள் பெருமளவு இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளன. இதனால், இம்மாதத்தில் இருந்து நூல் வர்த்தகமும் சிறப்பாக அமையும் என நூற்பாலைகள் நம்பிக்கை அடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×