search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரு சமூகத்தினரிடையே மோதல்: அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் சரண்
    X

    இரு சமூகத்தினரிடையே மோதல்: அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் சரண்

    • அபிராமி என்பவரின் வீட்டு ஓலை கொட்டகை தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • 3 பேரும் தர்மபுரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ளது சோக்காடி. இந்த ஊரில் மாரியம்மன் கோவில் ஒன்று குறிப்பிட்ட சமுதாயத்தினரால் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மாலை கோவிலில் கிரானைட் கற்கள் அறுக்கும் பணி நடந்தது.

    அப்போது அங்கு வந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்த அன்பரசு என்பவர் கிரானைட் கற்களில் இருந்து தூசி வீடுகளுக்கு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்ப டுவதாக கூறினார். இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இதை அறிந்த கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோக்காடி ராஜன் (60) இது குறித்து அன்பரசுவிடம் கேட்டார். அந்த நேரம் அவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இந்த தகராறு இரு சமுதாயத்தினரிடையே மோதலாக மாறியது. இதில் 2 தரப்பினரும் திரண்டு கற்களை வீசினார்கள். அதே போல அபிராமி என்பவரின் வீட்டு ஓலை கொட்டகை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த கல்வீச்சு மோதல் சம்பவத்தில் ஒரு தரப்பை சேர்ந்த திம்மராஜ் (28), கவிதா (35), சிலம்பரசன் (34), ஆறுமுகம் (58) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.

    அது குறித்து திம்மராஜ் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி விசாரணை நடத்தி, சோக்காடி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராமலிங்கம் (50), ஆனந்தன் (39), சித்தராஜ் (53), சித்தேவன் (44), சண்முகம் (40), சித்துராஜ் (55), 17 வயது சிறுவன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது கூட்டமாக வருதல், ஆபாசமாக பேசுதல், கலகம் விளைவித்தல், தாக்குதல், கொலை மிரட்டல், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது-. மேலும் சோக்காடி ராஜன் (60), கண்ணன் (65), சுமதி (35) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    அதே போல மற்றொரு தரப்பில் சித்தராஜ் (55) என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதில் தானும் கண்ணன் (65), சண்முகம் (40), சித்தேவன் (44) உள்ளிட்டோர் காயமடைந்ததாக கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் முனிராஜ் (49), வரதராஜ் (51), குமரன் (23), சத்யமூர்த்தி (27), செல்வம் (37), சுப்பிரமணி (42) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அன்பரசு (30), திம்மராஜ் (28), சந்தோஷ் (27), ஆறுமுகம் (58), சிலம்பரசன் (34), தனுஷ் (24), கலையரசன் (32) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சோக்காடி வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் தேடி வந்த, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கண்ணன், சுமதி ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுதா முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் தர்மபுரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    Next Story
    ×