என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிக லாபம் தருவதாக கூறி கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்களிடம் ரூ.1.60 கோடி மோசடி செய்தவர் தலைமறைவு
- அந்த நிறுவனத்தில் சுமார் 60 முதல் 70 பேர் உறுப்பினர்களாக முதலீடு செய்து வந்தனர்.
- பணம் கொடுத்த 9 பேரும் மிரட்டி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதிய வீட்டு வசதி வாரியத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 39). இவரும், மேலும் சிலரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு ஓசூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் என்னிடம் பங்கு சந்தை வணிகம் செய்வதாகவும், தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதற்கு தகுந்தாற் போல வருகிற லாபத்துடன் பணத்தை திருப்பி தருவதாக கூறினார்.
அதை நம்பி நான் ரூ.30 லட்சமும், எனது நண்பர் சங்கர் ரூ.40 லட்சமும், பிரகாஷ் ரூ.30 லட்சமும், சீனிவாசன் ரூ.30 லட்சமும், ஞானசேகர் ரூ.30 லட்சமும் முதலீடு செய்தோம்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் சுமார் 60 முதல் 70 பேர் உறுப்பினர்களாக முதலீடு செய்து வந்தனர். அதே போல நாங்கள் முதலீடு செய்ததை நம்பி கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் அந்த நிறுவனம் மூடப்பட்டது. அதன் உரிமையாளர் அருண்குமாரும் தலைமறைவாகி விட்டார். இதனால் எங்களை நம்பி பணம் கொடுத்த 9 பேரும் எங்களை பணம் கேட்டு மிரட்டி வருகிறார்கள்.
எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






