என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களை மிரட்டும் காலரா நோய்:  கண்டறியும் அறிகுறிகள்-தடுக்கும் சிகிச்சை முறைகள்-  மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள்
    X

    மக்களை மிரட்டும் காலரா நோய்: கண்டறியும் அறிகுறிகள்-தடுக்கும் சிகிச்சை முறைகள்- மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள்

    • பெரும்பாலான காலரா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கே முக்கிய அறிகுறியாக உள்ளது.
    • கடுமையான நீரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு விரைவாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

    தருமபுரி,

    பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்திலும் காலரா பாதிப்பு குறித்து அச்சம் எழுந்து உள்ளது.

    இந்த நிலையில் காலரா நோயை கண்டறியும் அறிகுறிகள் மற்றும் எளிய சிகிச்சை முறைகள் குறித்து தருமபுரியை சேர்ந்த மருத்துவர்கள் தந்துள்ள ஆலோசனைகள் வருமாறு:-

    காலரா என்பது ஒரு பாக்டீரியா நோயாகும். இது பொதுவாக அசுத்தமான நீரில் எளிதாகப் பரவும். போதுமான சுகாதாரம் இல்லாமல் நெரிசலான சூழ்நிலையில் பொதுமக்கள் வாழும் போது, காலரா பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. காலரா பாக்டீரியா நமது உடலில் ஏழு முதல் 14 நாட்கள் வரை இருக்கும். அந்தச் சமயத்தில் மற்றவர்களுக்கும் அது எளிதாகப் பரவக் கூடும்.

    பெரும்பாலான காலரா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கே முக்கிய அறிகுறியாக உள்ளது. குமட்டல் மற்றும் வாந்தியும் ஏற்படும். மற்றொரு முக்கிய அறிகுறி நீரிழப்பு ஆகும். உடல் எடையில் 10 சதவீதம் அல்லது அதற்கு மேலும் கூட நீரிழப்பு ஏற்படலாம். எரிச்சல், சோர்வு, குழி விழுந்த கண்கள், வாய் வறட்சி, அதிக தாகம், வறண்ட மற்றும் சுருங்கிய தோல் ஆகியவை காலரா நீரிழப்புக்கான அறிகுறிகளாகும்.

    மேலும், இதயத் துடிப்பு அதிகரிப்பது. குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய அறிகுறிகளும் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    காலரா எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். ஆரோ கரைசல் நீரை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். சராசரியாக முதல் நாளில் 6 லிட்டர் வரை ஆரோ தேவைப்படலாம்.

    கடுமையான நீரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு விரைவாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். உரிய நேரத்தில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளா விட்டால், ஆரோக்கிய மான நபர்களுக்குக் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். குறிப்பாகக் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், உணவைக் கையாளும் முன்பும் சோப்பு போட்டு 15 விநாடிகளுக்குக் கழுவ வேண்டும். அல்லது சான்டிசைர் மூலம் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

    முழுமையாகச் சமைத்த மற்றும் சூடாக இருக்கும் உணவை மட்டுமே உண்ண வேண்டும். பாதி சமைக்கப்பட்ட உணவு, குளிர்ந்த நிலையில் இருக்கும் உணவுகளை உண்ண வேண்டாம். சாலையோர உணவுகளை முடிந்த வரை தவிர்க்கவும். கொதிக்க வைத்த நீரைத் தவிர மற்ற நீரை அருந்த வேண்டாம்.

    இவ்வாறு மருத்துவர்கள் தங்களது ஆலோசனை களை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×