என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரிக்கு, வருகிற 22, 23-ந் தேதி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு
- கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
- 1750 பேருக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரிக்கு வருகிற 22 மற்றும் 23-ந் தேதி வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ண–கிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி–னார். அப்போது அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரியில் கலைஞரின் முழு உருவ சிலை திறப்பு விழா, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், டி.மதியழகன் எம்.எல்.ஏ. இல்ல திருமண வரவேற்பு விழா, நகர செயலாளர் நவாப் இல்ல திருமண விழா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்க தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரிக்கு வருகிற 22-ந் தேதி வருகிறார்.
22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருந்து ஓசூர் விமான நிலையம் வந்து கிருஷ்ணகிரிக்கு வருகிறார். அவரை வரவேற்கவும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை 2-ம் கட்டமாக தந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்து தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1750 பேருக்கு பொற்கிழி வழங்கி, பல்வேறு கட்சி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தி.மு.க. இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பெருந்திரளாக கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் வெற்றிச்செல்வன், சுகவனம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், நகர தி.மு.க. செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பேரூராட்சி தலைவர்கள் ஊத்தங்கரை அமானுல்லா, பர்கூர் சந்தோஷ், காவேரிப் பட்டணம் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பேரூராட்சி, ஒன்றிய குழு தலைவர்கள், தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






