என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மீது கார் மோதல்- அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்று திரும்பிய தொண்டர் பலி
- தமிழகம் முழுவதும் இருந்து பஸ், கார்களில் வந்து அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
- மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென முன்னாள் சென்ற லாரி மீது மோதியது.
மதுராந்தகம்:
சென்னை வானரகத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து பஸ், கார்களில் வந்து அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும் பெரும்பாலான தொண்டர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.
கரூர் மாவட்டம், கடவூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் செந்தில்குமார் (வயது 40) உள்பட 5 பேர் நேற்று இரவு காரில் கரூர் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர். மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென முன்னாள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரில் இருந்த செந்தில்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான செந்தில் குமாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல் நேற்று காலை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட் டம் உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வந்த வேன் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரையில் வந்தபோது லாரி மோதி விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.






