என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடி தாக்கி பலியான கன்று, 2 மாடுகளை படத்தில் காணலாம்.
ஆலங்காட்டியுடன் கனமழை இடிதாக்கி கன்று-2 மாடுகள் பலி
- மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து 2 மாடுகள் மற்றும் கன்று குட்டியை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார்.
- கூட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகச்சாரி என்பவரது வீட்டின் மீது தென்னை மரம் சாய்ந்து விழுந்தது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதிகளில் மாலையில் வெயில் மறைந்து திடீரென்று குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இந்த காற்று பின்னர் சூறாவளி காற்றாக வீசியது. இதைத்தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. அப்போது திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே ஆலங்கட்டிகளுடன் மழை பெய்தது.
இந்த மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மாறியது. இதனால் வெயிலால் வாட்டி வதைந்து கிடந்த ராயக்கோட்டை பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணிநேரம் பெய்த இந்த மழையால் ராயக்கோட்டையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இடிதாக்கி மாடுகள், கன்று சாவு
முன்னதாக ராயக்கோட்டை சிந்தேப்பள்ளியை அடுத்த பாவாடரபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. அவரது தம்பி முனிசாமி. விவசாயிகளான இருவரும் தங்களது வீட்டின் முன்பு இருந்த கொட்டாகையில் மாடுகளை கட்டி வைத்து இருந்தனர். நேற்று பெய்த மழையின்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் இடிதாக்கி 2 மாடுகள், ஒரு கன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி முத்தன், மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம் ஆகியோர் நேரில் வந்து மாடுகளை இழந்து தவித்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் உடனே அரசு கால்நடை மருத்துவருக்கு வெங்கடசுப்ரமணி தகவல் தெரிவித்தார். உடனே மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து 2 மாடுகள் மற்றும் கன்று குட்டியை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார். அதன்பிறகு பலியான மாடுகளை விவசாயிகள் அடக்கம் செய்தனர்.
இதேபோன்று மழையின்போது வீசிய சூறாவளி காற்றால் கெலமங்கலம் எச்சட்டிஅள்ளி கூட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகச்சாரி என்பவரது வீட்டின் மீது தென்னை மரம் சாய்ந்து விழுந்தது.
இதில் விவசாயி நாகச்சாரி வீடு முழுவதும் சேதமடைந்தது. மரம் விழுந்ததில் விவசாயி வீட்டின் அருகே இருந்த மின்சார கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. இதனால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் அப்பகுதி கிராம மக்கள் இருளில் தவித்தனர்.






