என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடும்பாறை அருகே மதுபாராக மாறிய நிழற்குடை; குடிமகன்கள் அட்டகாசம்
    X

    நிழற்குடையில் கிடக்கும் குடிமகன்கள் வீசி சென்ற மது பாட்டில்கள்.

    மயிலாடும்பாறை அருகே மதுபாராக மாறிய நிழற்குடை; குடிமகன்கள் அட்டகாசம்

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நிழற்குடை கட்டப்பட்டது.
    • காலை நேரங்களில் மது பாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் சிலர் நிழற்குடையில் அமர்ந்து மது குடிக்க தொடங்கினர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சியில் கருப்பையாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. எனவே இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1 கி.மீ. தொலைவு நடந்து சென்று கருப்பையாபுரம் விலக்கில் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறி சென்று வந்தனர். வெயிலில் காத்திருப்பதால் கருப்பையாபுரம் விலக்கில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நிழற்குடை கட்டப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் நிழற்குடையில் காத்திருந்து பஸ் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் மூலக்கடை பகுதியில் அதிகாலை முதல் மது பாட்டில்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    எனவே காலை நேரங்களில் மது பாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் சிலர் நிழற்குடையில் அமர்ந்து மது குடிக்க தொடங்கினர். இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போலீஸ் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். தற்போது நிழற்குடை முற்றிலுமாக மது அருந்தும் பார் ஆக மாறிவிட்டது.

    இதனால் தற்போது நிழற்குடை முழுவதும் காலி மது பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காலை நேரங்களில் கருப்பையாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு நிழற்குடையில் மது அருந்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×