search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல், மணல், எம்.சாண்ட் விலை உயர்வு: கட்டுமான பொருட்கள் திடீர் தட்டுப்பாட்டால் பணிகள் பாதிப்பு
    X

    செங்கல், மணல், எம்.சாண்ட் விலை உயர்வு: கட்டுமான பொருட்கள் திடீர் தட்டுப்பாட்டால் பணிகள் பாதிப்பு

    • பண்டிகை காலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வாழ் வாதாரத்தையும் பாதிக்கும்.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பருவமழையும் தொடர்ந்து பெய்து வருவதால் கட்டுமான பொருட்கள் கிடைப்பதில்லை. கட்டுமானத்துக்கு தேவையான ஆற்று மணல் 3 யூனிட் ரூ.40 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது. ஆனாலும் மணல் கிடைக்கவில்லை.

    இதேபோல் செங்கல், சிமெண்ட், எம் சாண்ட் விலை உயர்ந்து உள்ளதால் பில்டர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் இது கட்டுமானப் பணியில் பாதிப்பையும் சுணக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று பில்டர்கள் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உள்ளூர் கடைகளில் சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.440-க்கு விற்கப்படுகிறது. இது அரசு நிர்ணயித்த விலையைவிட ரூ.120 அதிகம். மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ப்ளு மெட்டல், எம்சாண்ட் ஆகிய வற்றின் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு கட்டிடங்கள், வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் நீர்வழிகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. செங்கற்கள் தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஒப்பந்ததாரர்களுக்கு சவாலாக உள்ளது. பண்டிகை காலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வாழ் வாதாரத்தையும் பாதிக்கும்.

    உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடும். இதனால் அவர்கள் திரும்பியவுடன் கட்டுமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் குறிப்பிடத் தக்க தாமதம் ஏற்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கட்டிட அனுமதி வழங்குவதை முறைப்படுத்தவும் கால தாமதத்தை குறைக்கவும் வேண்டிய தேவையும் உள்ளது. அனுமதி வழங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையின் சுமையை குறைக்க 100 சதவீதம் உயர்த்தப்பட்ட கட்டிட திட்ட ஒப்புதல் கட்டணம் மற்றும் உள் கட்டமைப்பு மாற்றங்களில் சமீபத்திய அதிகரிப்பு ஆகியவற்றை மறு பரிசீலனை செய்யுமாறு பில்டர் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது.

    Next Story
    ×