என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
காலை சிற்றுண்டியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்
- சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.
- அரசாணை வெளியிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், காலை சிற்றுண்டியை சத்துணவு அமைப்பாளர்களே வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றியத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பொன்னி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் மணி, மாநில பட்டுவளர்ச்சி சங்க பொருளாளர் கல்யாண சுந்தரம், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் பழனியம்மாள் சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் கோதண்டபாணி நிறைவுரை ஆற்றினார். முடிவில் ஒன்றிய பொருளாளர் நீலா நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். மேலும் காலைச் சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களே வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.






