search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் உழவர் சந்தை முன்பு  சாலையில் தாறுமாறாக நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு :  போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
    X

    கடலூர் உழவர் சந்தை முன்பு தாறுமாறாக நிறுத்திய வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் இரும்பு சங்கிலியால் பூட்டு போடுவதை படத்தில் காணலாம்.

    கடலூர் உழவர் சந்தை முன்பு சாலையில் தாறுமாறாக நிறுத்திய வாகனங்களுக்கு பூட்டு : போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

    • காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர்.
    • உழவர் சந்தை அருகில் சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் கயிறு பதித்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள், பழவகைகள் போன்றவற்றை வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், கடலூர் - சிதம்பரம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர் போக்குவரத்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உழவர் சந்தை அருகில் சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் கயிறு பதித்தனர். இன்று காலை உழவர் சந்தைக்கு வந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வாகனங்களை சாலையில் மீண்டும் தாறுமாறாக நிறுத்தினர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, சாலையில் பதிக்கப்பட்டுள்ள கயிறை தாண்டி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் இரும்பு சங்கிலியால் பூட்டு போட்டனர்.

    இதற்கிடையே காய்கறி வாங்கிக்கொண்டு வெளியே வந்த பொதுமக்கள், தங்கள் வாகனங்களுக்கு பூட்டு போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் தாங்கள் இனிமேல் வாகனங்களை தாறுமாறாக நிறுத்த மாட்டோம் என உறுதி அளித்தனர். அப்போது போலீசார், இனி இதுபோன்று போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×