என் மலர்
உள்ளூர் செய்திகள்

நஞ்சராயன்குளத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் வரும் பறவைகள்
- மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.
- குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.
திருப்பூர் :
திருப்பூர் நஞ்சராயன் குளம் தமிழகத்தின், 17 -வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.
கடந்த மாதம் ரஷ்யா, மங்கோலியா பகுதிகளில் இருந்து வரும் பட்டைத்தலை வாத்து, தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, பச்சைக்கால் உள்ளான், சதுப்பு மண்கொத்தி, பொரி மண்கொத்தி, சிறு கொசு உள்ளான், பேதை உள்ளான், மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.
இதுமட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர் காகம், பழுப்பு நாரை, மடையன், கரண்டிவாயன், நெடுங்கால் உள்ளான், புள்ளிமூக்கு வாத்து, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, மீன்கொத்திகள் என பறவைகள் வந்தன. வழக்கமாக கூட்டமாக வரும் பறவையினங்கள் 20க்கும் குறைவான எண்ணிக்கையில் வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:- வெளிநாட்டு பறவைகள், குளிர்கால வலசையாக நஞ்சராயன்குளம் வந்துள்ளன. வழக்கமாக 100 முதல் 200க்கும் அதிகமான பறவைகள் கூட்டமாக வந்து செல்லும். இம்முறை 20க்கும் குறைவான பறவைகளே வந்துள்ளன. குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.
வெளிநாட்டு பறவைகள் தண்ணீரில் நடந்து சென்றுதான் உணவு தேடும். ஆழமான குளம், தண்ணீர் அதிகம் உள்ள குளங்களில் தங்காது. குளத்தில் அதிகம் தண்ணீர் இருப்பதால் அருகே உள்ள மற்ற பகுதிக்கு சென்றிருக்கும்.கோவை, ஈரோடு பகுதியிலும் பறவை வரத்து குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களுடன் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






