என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் தெப்பக்குளம் நடுவே ரூ.15 லட்சம் மதிப்பில் பாலம் அமைத்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை
- ,சீதைக்கு விநாயகர் மோதிரம் வழங்குவது போன்ற அழகான, வித்தியாசமான சிலை வைக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு கருதி, பாலத்தின் மீது ஒரு தடவைக்கு 10 பேர் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.
ஓசூர்,
ஓசூர் தேர்பேட்டை இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்தில், ரூ.15 லட்சம் செலவில் கே.ஜி.எப்.படக்குழுவினரைக் கொண்டு பாலம் அமைத்து, தீவு போல் செட் அமைத்தும் உள்ளே விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பாலம் வழியாக விநாயகரை தரிசிக்க செல்லும் வழியில்,பிரமாண்ட ராமர் சிலை. 'நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்புறம் மண்டபத்தில்,சீதைக்கு விநாயகர் மோதிரம் வழங்குவது போன்ற அழகான, வித்தியாசமான சிலை வைக்கப்பட்டுள்ளது.
குளத்தை சுற்றிலும் தீப்பந்தங்கள் ஜொலித்து மேலும் பிரமிப்படைய வைக்கும் வகையில் தத்ரூபமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாலத்தின் மீது நடந்து சென்று விநாயகரை தரிசிப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, பாலத்தின் மீது ஒரு தடவைக்கு 10 பேர் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த வித்தியாசமான யோசனை குறித்து விழாக்குழு தலைவரும் ஓசூர் கிழக்குபகுதி அ.தி.மு.க.செயலாளருமான ராஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமார் இலங்கைக்கு பாலம் அமைத்தது போன்று, இங்கு குளத்தின் நடுவே பாலம் அமைக்கப்பட்டது.
அதேபோல், சீதைக்கு அனுமன் மோதிரம் வழங்கியதை, இங்கு விநாயகர் வழங்குவதுபோல் சிலை வைத்துள்ளோம். கே.ஜி.எப்.படத்திற்கு பணிபுரிந்த கலையமைப்பு குழுவினர், இந்த செட் உருவாக்கி தந்தனர். தெப்பக்குளத்தின் உள்ளே குழாய்கள் செலுத்தி, அதன் மேல்புறம் பலகைகள் பொருத்தி, பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. ஒரு வார காலம், இரவு பணி நடைபெற்றது. நற்பணி மன்றத்தினரின் சொந்த செலவில் இந்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






