என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாத்தகோட்டாவில் சாலையை அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை செய்து, அமைச்சர் ஆர்.காந்தி, பணிகளை தொடங்கிவைத்தபோது எடுத்த படம்.
பாத்தகோட்டாவில் ரூ. 2 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி
- ரூ.22 கோடியே 79 லட்சம் மதிப்பிலான கட்டிடப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை அமைச்சர் காந்தி தொங்கி வைத்தார்.
- 242 பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சிகளில் பேசினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பாத்த கோட்டாவில், தேன்கனிக்கோட்டை முதல் உத்தனப்பள்ளி வரை ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தி வலு ப்படுத்தும் பணிகளுக்கும், பாத்தகோட்டா முதல் டி. குருபரபள்ளி வரை ரூ. 2 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய சாலையை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தும் பணிகளுக்கும் என மொத்தம் ரூ.22 கோடியே 79 லட்சம் மதிப்பிலான கட்டிடப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தொங்கி வைத்தும், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திநகர், கிருஷ்ணா நகர், டைட்டான் டவுன்சிப் மற்றும் ஓ.காரப்பள்ளி கொத்தகொண்டபள்ளி ஆகிய 5 பகுதியில் பகுதி நேர மற்றும் முழுநேர ரேஷன் கடைகளையும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.
மேலும் 55 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 207 பயனாளிகளுக்கு இருளர் இன சாதி சான்றிதழ்கள் என மொத்தம் 242 பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சிகளில் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி எம்.பி.டாக்டர் செல்லகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், தளி டி.ராமச்சந்திரன் மற்றும் ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, சப்- கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, துணை மேயர் ஆனந்தய்யா, மாநில தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






