என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெடி விபத்து நடந்த இடத்தை, கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா ஆய்வு செய்த காட்சி.
கர்நாடகா முழுவதும் அடுத்த ஆண்டு முதல் பட்டாசுக்கு தடை விதிக்கப்படும்
- அடுத்த ஆண்டு முதல் கர்நாடகா முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
- இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, கர்நாடக அரசு தலா ரூ. 5 லட்சம் தருவதாக உறுதியளித்தது.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப் பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7-ந் தேதி நடந்த வெடிவிபத்தில் 14 பேர் சம்பவத்தன்றும், மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் என இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை, கர்நாடக உள்துறை மந்திரி ஜி.பரமேஸ்வரா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் முழு விபரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பரமேஸ்வரா, "பட்டாசு கடை தீ விபத்தில் இன்றுடன் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம், பாடம் கற்றுத் தந்துள்ளது. இந்தாண்டு, தீபாவளி பண்டிகையின் போது, பெங்களூருவில் பட்டாசுக்கு தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல், டெல்லியைப் போன்று, கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து ரக பட்டாசுகளுக்கும் தடைவிதிக்கப்படும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, கர்நாடக அரசு தலா ரூ. 5 லட்சம் தருவதாக உறுதியளித்தது. அந்த தொகை விரைவில் வழங்கப்படும். விபத்து நடந்த பட்டாசு கடையின் உரிமம் கடந்த 2022-ஆம் ஆண்டு, லைசென்ஸ் தேதி காலாவதியானதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அதன் உரிமையாளர் நவீன் என்பவர் போலியான சான்றுகளை வைத்து பட்டாசு கடை நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். இந்த ஆய்வின்போது, தீயணைப்பு துறை ஏடிஜிபி கமல்நாத், ஐஜிபி ரவி காந்தே கவுடா, டி.ஐ.ஜி.ரவி சென்னன்னா,பெங்களூருரூரல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புருசோத்தம், ஆனேக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் குமார், அத்திப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா கவுடா, சப் இன்ஸ்பெக்டர் நாராயண் ராவ், ஆகியோர் உடன் இருந்தனர்.






