என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த பேக்கரி கடை ஊழியர் சாவு
- வேகத்தடையை கவனிக்காமல் தங்கப்பன் வண்டியை வேகமாக ஓட்டி வந்தார்.
- அவர் வண்டியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சின்கம்மாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் தங்கப்பன் (வயது24). இவர் தீர்த்தமலையில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கடையில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் தங்கப்பன் வீட்டிற்கு திரும்பிவந்தார். அப்போது அவர் தருமபுரி-பாலக்கோடு சாலையில் உள்ள காட்டம்பட்டி அருகே வந்தபோது அங்குள்ள ஒரு வேகத்தடையை கவனிக்காமல் தங்கப்பன் வண்டியை வேகமாக ஓட்டி வந்தார்.
இதில் அவர் வண்டியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து தங்கப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






