என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாய்கள் தொல்லையால் ஆட்டோவுக்கு வேலி அமைத்த டிரைவர்
- திருத்தேரி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.
- பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர்.
சென்னை :
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட திருத்தேரி கிராமம் குப்பக்காரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர். பகலில் ஆட்டோவை ஓட்டிவிட்டு இரவு வீட்டுக்கு அருகே நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். இரவு நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட நாய்கள் அடைக்கலம் தேடி இவரது ஆட்டோவில் ஏறி படுத்துக்கொள்ளும்.
அப்போது டிரைவர் இருக்கை, பயணிகள் இருக்கைகளை கடித்து குதறிவிடுகிறது. எனவே நாய் தொல்லையை தடுக்க சரவணன் எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது. இதனால் அவர் சிறிய குச்சிகளை கொண்டுவந்து தட்டி கட்டி நாய்கள் ஏறாத வண்ணம் ஆட்டோவின் இருபுறமும் கட்டி அரண்போல வேலி அமைத்தார்.
ஆனால் அதையும் மீறி நாய்கள் ஆட்டோவின் உள்ளே செல்வதாக வேதனையுடன் தெரிவித்தார். திருத்தேரி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். இதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகமே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.