என் மலர்
உள்ளூர் செய்திகள்

இ-சேவை, ஆதார் மையங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அமல்
- இ- சேவை, ஆதார் மையங்களுக்கு பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் வழங்கப்படுகிறது.
- இ- சேவை மையங்கள், ஆதார் மையங்களையும் செயல்படுத்திவருகிறது.
திருப்பூர்:
டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான சேவைகள், பொருட்களை பணமில்லா பரிவர்த்தனை மூலம் மக்கள் பெறமுடிகிறது. தமிழக அரசு கேபிள் டி.வி.,நிறுவனம், கேபிள் டி.வி.,ஒளிபரப்பு மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் இ- சேவை மையங்கள், ஆதார் மையங்களையும் செயல்படுத்திவருகிறது.
ஆதார் மையங்களில் ஆதார் கார்டில் பல்வேறு திருத்தங்களுக்கு விண்ணப்பித்தல், இ-சேவை மையங்களில் வருவாய்த்துறை, பதிவுத்துறை சார்ந்த சான்றுகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்கான கட்டணம் மக்களிடமிருந்து ரொக்கமாகவே பெறப்பட்டுவருகிறது.
அரசு கேபிள் டி.வி., நிறுவனம் தற்போது தனது கட்டுப்பாட்டில் இயங்கும் ஆதார் மற்றும் இ-சேவை மையங்களில் பணமில்லா பண பரிவர்த்தனை முறையை அமல்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் 3 மண்டல அலுவலகங்கள் என 14 இடங்களில் அரசு கேபிள் நிறுவனத்தின் இ- சேவை மற்றும் 9 தாலுகா அலுவலகங்களில் ஆதார் மையங்கள் இயங்குகின்றன.
இம்மையங்களில் கடந்த 3 நாட்களாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு கேபிள் டி.வி., நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும், அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள இ-சேவை, ஆதார் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக இ- சேவை, ஆதார் மையங்களுக்கு பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் வழங்கப்படுகிறது.
டெபிட், கிரெடிட் கார்டை மெஷினில் ஸ்வைப் செய்வதன் மூலமாகவோ, க்யூ.ஆர்., கோடு ஸ்கேனிங் மூலமாகவோ கட்டண தொகையை எளிதாக செலுத்த முடியும். ஆனாலும் முதியவர்கள் உட்பட டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து தெரியாதோரிடம் கட்டண தொகை வழக்கம்போல் பணமாக பெறப்படும் என்றனர்.






