search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மார்க்கெட்டில்   தக்காளி விலை சரிவு
    X

    தருமபுரி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு

    • இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • சந்தையில் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, ராயக்கோட்டை, ஓசூர் மற்றும் வெளிமாநில தக்காளிகள் தினசரி மார்க்கெட்டிற்கு வரத்து இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது.

    கடந்த மே 1-ம் தேதி ஒரு கிலோ தக்காளி 30 ஆக இருந்தது. 15-ம் தேதி 50 ஆக உயர்ந்தது. பின்னர் விலை மளமளவென உயர்ந்து கடந்த மே 23-ம் தேதி 74 ரூபாய்க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ 120 ரூபாயை எட்டியது.

    பின்னர் படிப்படியாக குறைந்து கிலோ தக்காளி 50 ரூபாயில் தொடர்ந்து இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக தக்காளி கிலோ 30 முதல் 34 ரூபாய் வரை ஏற்றம், இறக்கமாக இருந்து வந்தது.

    பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பெல்ராம்பட்டி, பஞ்சப்பள்ளி, அத்திமுட்லு, திருமல்வாடி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ளனர்.

    இதனால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாலும், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கி இன்று உழவர் சந்தையில் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் விளையும் தக்காளிகளுக்கென்று தனி மவுசு உள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் 15 கிலோ கூடை 200 ரூபாய்க்கும், 28 கிலோ கூடை 300 முதல் 350 ரூபாய் வரை வாங்கி செல்கின்றனர்.

    Next Story
    ×