search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே அரசு பள்ளியில்  எலுமிச்சை சாதம் சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு  வாந்தி, பேதி ஆனதால் பெற்றோர்கள் அதிர்ச்சி
    X

    எலுமிச்சை சாதம் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளையும், வழங்கப்பட்ட எலுமிச்சை சாதத்தையும். படத்தில் காணலாம்.

    மத்தூர் அருகே அரசு பள்ளியில் எலுமிச்சை சாதம் சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஆனதால் பெற்றோர்கள் அதிர்ச்சி

    • குட்டூர் துவக்கப்பள்ளியில் சமையல் செய்துவிட்டு தினமும் காரிமங்கலத்தானூர் பள்ளிக்கு எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறி வருகிறார்.
    • சாதம் சரியாக வேகாமலும், புளிப்பு தன்மை அதிகமாக இருந்ததாலும் இதுபோன்று நடந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், குட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மத்தூர் அருகே உள்ள காரிமங்கலத்தானூரில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 19 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் சத்துணவு பணியிடம் காலியாக உள்ளதால் குட்டூர் துவக்கப்பள்ளியில் வேலை செய்யும் சத்துணவு பணியாளர் விஜயா என்பவர் இப்பள்ளிக்கும் சத்துணவு பணியாளராக செயல்பட்டு வருகிறார். குட்டூர் துவக்கப்பள்ளியில் சமையல் செய்துவிட்டு தினமும் காரிமங்கலத்தானூர் பள்ளிக்கு எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று எலுமிச்சை சாதம் செய்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரிமங்கலத்தானூர் பள்ளிக்கு எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறியுள்ளார்.

    இதை சாப்பிட்ட குழந்தைகள் சபிதாஸ்ரீ, வர்ணாஸ்ரீ, ரோகித், தினேஷ் உள்பட 7 மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஆனதால் சிரமத்திற்கு ஆளாகினர். பயந்து போன பெற்றோர்கள் அருகே இருந்த மருத்துவமனையை நாடினர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சாதம் சரியாக வேகாமலும், புளிப்பு தன்மை அதிகமாக இருந்ததாலும் இதுபோன்று நடந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து பர்கூர் பி.டி.ஓ., சுப்பிரமணியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.

    பின்னர் தொடர்ந்து கேட்டபோது ஒரு குழந்தைக்கு மட்டும் பேதி ஆனதாகவும் மற்றவர்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அங்கு சத்துணவு பணியாளர் இல்லாததால் மாற்று இடத்திலிருந்து எடுத்து வந்து உணவு பரிமாறியதாகவும், இன்று முதல் காரிமங்கலத்தானூரில் உள்ள பள்ளியில் சமையல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Next Story
    ×