என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசிய 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபா.இளவரசன் (58). தமிழர் நீதிக்கட்சியின் தலைவரான, இவர், கடந்த பிப்ரவரி மாதம் 11ந்தேதி உடையார்பாளையம் பகுதியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது காரில் ஊருக்கு திரும்பியுள்ளார்.

    அப்போது, உடையார்பாளையம் அருகே ஒரு கும்பல் சுபா.இளவரசன் கார் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து, உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சுபா.இளவரசன் புகார் அளித்தார். அதன் பேரில், குவாகம் இளந்தமிழன் (28), கழுமங்கலம் உருளை ராஜூ (43), காட்டுமன்னார்குடி வட்டம் சித்தமல்லி  ரவிச்சந்திரன் (52),  

    குவாகம் வெற்றித் தெருவை சேர்ந்த கருப்பையன் (40), சேத்தியாத்தோப்பு இளங்காடு  சிவகுமார் (40), கோப்பிலியன் குடிக்காடு சங்கர் (46) ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், மேற்கண்ட 6 நபர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.  

    அதன் நகல்களை, திருச்சி சிறை அதிகாரிகளிடம், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.
    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    உடையார்பாளையம் சித்திரக்கார தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி (80). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் வழக்குப் பதிந்து குப்புசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி குப்புசாமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் ஆபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குப்புசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    அரியலூர்:

    அரியலூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 86). இவர் கடந்த 2020ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார். 

    அதன் அடிப்படையில்  போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆனந்த் இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி குப்புசாமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
    ஜெயங்கொண்டத்தில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் வயது 28. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு தற்போது விவசாய வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் வடக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் மகள் ஜெயந்தி (20) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    தற்போது இருவரும் செங்குந்தபுரம் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.  

    நேற்று விவசாய வேலை செய்வதற்காக சேகர் சென்றுவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜெயந்தி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயந்தியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் தங்களது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் பெண் இறந்ததால் உடையார்பாளையம் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    செம்பியன் மாதேவி பேரரசியின் பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பியக்குடி கிராமத்தில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியின் 1112 பிறந்த நாள் விழா சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
    இந்நிலையில் இந்தாண்டு  நேற்று செம்பியன் மாதேவி உருவச்சிலைக்கு அலங்காரம் செய்து ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு திருமானூர் ஒன்றிய சேர்மன் சுமதி அசோக சக்கரவர்த்தி. தலைமையேற்றார்.  சிறப்பு விருந்தினர்களாக வளனறிவு வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தங்க. சண்முக சுந்தரம், புலவர் வண்ணை கலியபெருமாள், பாளை திருநாவுக்கரசு, சமூக ஆர்வலர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவரது உருவச் சிலைக்க மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    அரியலூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் பாண்டியன் எனும் ஏரி உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 202 ஏக்கர் 83 சென்ட் நிலப்பரப்பு கொண்டது. இதனை சுற்றி பலரும் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் தலித் இன மக்கள் சுமார் 50 குடும்பத்தினர் கடந்த 100 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சுமார் 22 வீடுகள் தற்பொழுது நீர்நிலையை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அதனை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின்படி பொதுப் பணித்துறை, மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் அகற்றப்பட்டது.

    அப்போது தங்களுக்கு இடம் கொடுக்காமலேயே எங்கள் வீட்டை இடிக்க வருகிறீர்களே? என அப்பகுதி மக்கள் அழுது புலம்பி அதிகாரிகள் மீது மண்ணை வாரி இறைத்தனர். பெற்றோர்கள் அழுது புலம்புவதை கண்டு வேதனை அடைந்த அவர்களது படிக்கும் குழந்தைகளும் தங்கள் வீடு போகிறதே என்று கண்ணீர் மல்க அழுது அதிகாரிகளிடம் கெஞ்சியும் பயனில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஏரி புறம்போக்கு என்று தெரிந்தும் எங்களுக்கு தொகுப்பு வீடு கொடுத்து யார்? வீடு கட்ட அனுமதி கொடுத்தது யார்? வீட்டு வரி ரசீது கொடுத்தது யார்? குடிநீர் குழாய் இணைப்பு, மின்னிணைப்பு கொடுத்தது யார்? இவை எல்லாவற்றையும் அரசே கொடுத்துவிட்டு தற்போது மாற்று இடம் கொடுக்காமல் இடிப்பது முறையற்ற செயலாகும் என்றனர்.

    மேலும் பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ரோட்டில் வீசி தீயிட்டுக் கொளுத்த முயற்சித்தனர். அப்போது அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    அப்போது அதிகாரிகள் மாற்று இடம் வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து வீடு இழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் முயற்சியால் மாற்று இடம் வழங்கப்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

    உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் சுய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
    அரியலூர்:

    அரியலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் மான்போர்ட் மெட்ரிக் மேல் நிலைபள்ளி முதல்வர் அந்தோணிசாமி செழியன் வரவேற்று பேசினார்.

    விழாவில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்துகொண்டு பேசியதாவது:

    மாணவர்கள் புதிய படிப்புகளையும், புதிய கல்வி நிலையங்களையும் தேடி பயணம் மேற்கொள்ளும் காலம் இது. இத்தகைய சூழ்நிலையில், முதலில் மாணவர்கள் உயர் கல்வியின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை நீங்கள் பெற்ற கல்விக்கும் இனிமேல் நீங்கள் பெறப்போகும் கல்விக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. நீங்கள் தான் உயர் கல்வியை நாடி, தேடி செல்ல வேண்டும். இதில் மூன்று வகை மாணவர்கள் உள்ளனர்.

    அதில், விரும்பிய படிப்பை விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு பெற்றவர், விரும்பாத படிப்பை விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு பெற்றவர், விரும்பாத படிப்பை விரும்பாத கல்வி நிறுவனத்தில் கட்டாய சூழ்நிலையில் படிக்கும் வாய்ப்பு பெற்றவர்.

    யாராக இருந்தாலும் ஒரு புதிய பயணத்தையும், ஒரு புதிய அணுகுமுறையையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இங்கு உள்ளது. இங்கு புரிதல் மிக முக்கியம். எனவே படிக்கின்ற கல்வி வேலைவாய்ப்பு தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

    உயர்கல்வி என்பது உங்கள் வாழ்வில் ஏற்படும் பரிணாம வளர்ச்சி என்பதை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புரிந்துகொண்டு அதற்கான முழு கவனத்தையும் செலுத்தினால் வெற்றி நிச்சயம் என பேசினார்.
    அரியலூர் அருகே சிறுவளூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்குதல் தொடங்கி வைக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 43 மாணவர்களுக்கு மாலை நேர உணவுகள் வழங்கும் விழா அப்பள்ளியில் நடைபெற்றது.

    விழாவுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை தாங்கினார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மாலை நேர உணவுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், பள்ளியில் வழங்கப்படும் இந்த சத்தான உணவில், சுண்டல், பட்டாணி, பாசிப்பயறு, நிலக்கடலை, எள்ளுருண்டை, குதிரைவாலி, சாமை, வரகு ஆகிய சிறுதானியங்கள் வழங்கப்படுகிறது.

    பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் இதனைப் பயன்படுத்தி நன்கு தேர்ச்சி பெற வேண்டும். வருகிற மே மாதம் 30 ஆம் தேதி வரை இந்த உணவு வகைகள் வழங்கப்படும்.

    இதற்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்த மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, கிராமப் பொதுமக்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு எனது பாராட்டுகள் என்றார்.

    விழாவுக்கு ஊராட்சி தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சின்னதுரை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அகிலா, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுத்தலைவர் மனோகரன், ஊராட்சி செயலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். முடிவில் அறிவியல் ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் செய்திருந் தனர்.
    அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் வருகிற 23ந்தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 54வது பட்டமளிப்பு விழா வரும் 23 ஆம் தேதி காலையில் கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் நடைபெற உள்ளது.

    அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், இளங்கலை, முதுகலை மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கல்லூரி அலுவலக பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது. விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளனர்.

    பட்டம் பெறுபவர்கள் அழைப்பிதழை கையில் கொண்டு வரவேண்டும். விழா அரங்கிற்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை அழைத்து வருவது தவிர்க்க வேண்டும்.

    விழா அரங்கிற்குள் காலை 9 மணிக்குள் வந்து இருக்கையில் அமர வேண்டும். விழா முடிந்த பின்னர்தான் அனைவரும் வெளியே செல்ல வேண்டும்.

    பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
    ஆண்டிமடத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில்  சப்இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில்  வந்த வாலிபர் ஒருவர் விசாரணை செய்தபோது முரண்பாடாக பதில் அளித்துள்ளார். 

    உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர். 

    விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாதுளம் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார் வயது 40 என தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    அரியலூர் மாவட்டத்தில் வருகிற 24ந்தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சிகளுக்கான இலக்குகளை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    அரியலூர்:

    இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளின் ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொருட்டு வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான கிராமம், குழந்தை பாதுகாப்பான கிராமம்,

    தண்ணீர் நிறைவு பெற்ற கிராமம், தூய்மை மற்றும் பசுமையான கிராமம், தன்னிறைவு கிராமம், சமூக பாதுகாப்பு கிராமம், நல்லாட்சி கிராமம், வளர்ச்சியை ஏற்படுத்தும் கிராமம், ஆகிய ஒன்பது வகையான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் கொடுக்கப்பட்டன.

    இதில் ஊராட்சிகளுக்கு தேவைப்படும் இலக்குகளை ஒன்றுக்கு குறையாமலும், மூன்றுக்கு அதிகமாகாமலும் தேர்ந்தெடுத்து அதன் இலக்கை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக எட்டிட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இலக்குகளின் முன்னேற்றத்தை ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.

    11.04.2022 முதல் 17.04.2022 வரை அனைத்து கிராம ஊராட்சிகளின் முத்திரை வாரம் கொண்டாடப்பட்டது. இதில் ஒவ்வொரு ஊராட்சியும் கூட்டத்தை நடத்தி ஊராட் சிகளுக்கு தேவையான இலக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    24.04.2022 தேசிய ஊராட்சிகள் தினத்தன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற உள்ளது. இதில் ஊராட்சி கூட்டத்தில் நீடித்த வளர்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை கிராம சபையில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.

    சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் கள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் தட்டச்சர், மத்தியஸ்தர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர் பணிக்கும், புதியதாக தொடங்கப்படவுள்ள சமரச மையத்துக்கு மத்தியஸ்தர் பணிக்கும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாடு முழுவதும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதையடுத்து, அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் பணிக்கு தகுதிய வாய்ந்த ஓய்வுப் பெற்ற நீதித்துறை ஊழியர்கள் அல்லது அரசு ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இது தாற்காலிக பணியாகும். தேர்வு செய்யப்ப டுபவர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். அதே போல், விரைவில் தொடங்கப்படவுள்ள நுகர்வோர் சமரச மையத்துக்கு, மத்தியஸ்தர் பணிப்புரிய விருப்பம் வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சமரச பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள், 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அல்லது வேறு தொழில் சார்ந்த அனுபவம் கொண்டவர்கள், சமரச நிபுணர்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

    இவர்களுக்கு நுகர்வோர் சமரச மைய நெறிமுறைகளின்படி கௌரவ ஊதியம் வழங்கப்படும். மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மே 5 ஆம் தேதிக்குள் தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×