என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு ஒன்றிய பெருந்தலைவர் ஆதரவு
    X

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு ஒன்றிய பெருந்தலைவர் ஆதரவு

    • அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவர் மருதமுத்து அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
    • எடப்பாடி பழனிசாமி பல்வேறு நெருக்கடியிலும் ஆட்சியை திறம்பட நடத்தி ஐந்து ஆண்டுகள் ஆட்சியை மக்கள் விரும்பும் ஆட்சியாக நடத்தினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய பெருந்தலைவரும், ஒன்றிய (வடக்கு) அ.தி.மு.க. செயலாளரும், அழகபுரம் கூட்டுறவு சங்க தலைவருமான சிலம்பூர் இரா.மருதமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். தன்னுடைய முதல்வர் பதவியை காப்பாற்றுவதற்காக சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக முன்மொழிந்தவர் ஆவார்.

    சசிகலா முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு ஓ.பி.எஸ்.ஐ ராஜினாமா செய்ய கூறிய உடன் ராஜினாமா செய்து விட்டு ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தர்மயுத்தம் செய்தார். அதற்கு முன்பாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் தர்மயுத்தம் செய்திருந்தால் இவர் எடுத்த முடிவு நல்லதாக அமைந்திருக்கும்.

    தர்மயுத்தம் செய்து கழகத்தை விட்டு வெளியேறி ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார். இது கழகத்திற்கு செய்த துரோகம். மீண்டும் கழகம் ஒன்றாக இணைவதற்கு பா.ஜ.க. கேட்டு கொண்டதாலே கழகத்தில் பாதி முடிவெடுக்கும் உரிமையை பெற்றார்.

    கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இவருடைய உழைப்பு, பங்களிப்பு இல்லை. தற்போது தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எதிர்க்கட்சியான தி.மு.க.வையும், முதல்வரை இவரது மகன் நேரில் சந்தித்து நீங்கள் சிறப்பான ஆட்சியை நடத்துகிறீர்கள் என்று கூறுகிறார். இதனால் ஓ.பி.எஸ்.ஐ ஏற்க மனம் மறுக்கிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தவுடன் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தி.மு.க., சசிகலா, பா.ஜ.க., ஓ.பி.எஸ். ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியிலும் ஆட்சியை திறம்பட நடத்தி ஐந்து ஆண்டுகள் ஆட்சியை மக்கள் விரும்பும் ஆட்சியாக நடத்தியவர்.

    நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் தமிழகமெங்கும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து கழக வேட்பாளருக்கு பொருளாதார உதவி செய்து வலுவான எதிர்க்கட்சியாக அமைவதற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

    தன் குடும்பத்திலிருந்து எவரையும் அரசியலில் பயன்படுத்தாமல் வாரிசு அரசியல் ஏற்படுத்தாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்படுகிறார்.

    இன்று அடிமட்ட தொண்டன் முதல் மேல் மட்டத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் வரை பெரும்பான்மையாக 99 சதவீத கழகத்தினர் ஏற்றுக் கொள்ளக்கூடிய வலுவான ஆளுமை மிக்க திறம்பட செயல்படக்கூடிய, அனைவரையும் அரவணைக்க கூடிய ஒரு தலைவராக நம் கழகத்தில் உருவெடுத்துள்ளார்.

    மக்கள் பேரன்பை பெற்றுள்ள இவரே அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றால் கழகம் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்களுக்காக இயங்கும், மக்கள் பணி செய்யும் என்கின்ற ஜெயலலிதாவின் வேதவாக்கை நம்மால் நிறைவேற்ற முடியும்.

    எடப்பாடியாரை கழகத்தின் பொதுச்செயலாளராக, பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி ஜெயலலிதாவின் ஆட்சி அமைப்போம், கழகத்தை காப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×