search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறித்துவ தேவாலயங்களை சீரமைத்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர் தகவல்
    X

    கிறித்துவ தேவாலயங்களை சீரமைத்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர் தகவல்

    • 20 வருடங்களுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு ரூ.6 லட்சமும் மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.
    • நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் தற்போது கூடுதல் பணிகளாக தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 10 முதல் 15 வருடம் பழமையான கட்டிடங்களுக்கு ரூ.2 லட்சமும், 15 முதல் 20 வருடம் பழமையான கட்டிடங்களுக்கு ரூ.4 லட்சமும், 20 வருடங்களுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு ரூ.6 லட்சமும் மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவால் பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம்.

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×