search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி மீண்டும் தொடக்கம்
    X

    கோப்புபடம்

    அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி மீண்டும் தொடக்கம்

    • பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்
    • உற்பத்தி நிறுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் உற்பத்தி தொடங்கி உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட எவர் சில்வர் பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. தினமும் 25 முதல் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த முறை நடந்த பேச்சுவார்த்தையில் 16 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    கூலி உயர்வை வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபாரிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், தொழில் மந்த நிலையில் இருப்பதாகவும் கூறி கடந்த 10-ந்தேதி பாத்திர உற்பத்தியை நிறுத்துவதாக எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    இதன் படி 14 நாட்கள் எவர் சில்வர் பாத்திர உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 லட்சம் ரூபாய் வீதம் 14 நாளில் 4 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்பட்டது.உற்பத்தி நிறுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் உற்பத்தி தொடங்கி உள்ளது. இதற்காக பட்டறையை சுத்தம் செய்து உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க பொருளாளர் ராஜேந்திரன் கூறுகையில், கூலி உயர்வால், பாத்திரத்தின் விலை அதிகரித்துள்ளது என்பதை வெளி மாநில, மாவட்ட விற்பனையாளர் மற்றும் வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.உற்பத்தி நிறுத்தம் முடிந்து உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்ற தொழிலாளர்களை வேலைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

    Next Story
    ×