என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெத்ததாளப்பள்ளியில் சுகாதார தூய்மை பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
துணி பைகள் பயன்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- தூய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு
- பசுமையான ஊராட்சியை உருவாக்குதல் குறித்து விழிப்புணர்வு பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
- சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" இயக்க விழிப்புணர்வு பேரணி மற்றும் சுகாதார தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி முன்னிலை வகித்தார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கடந்த 20ந் தேதி முதல் வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை "நம்ம ஊரு சூப்பரு" இயக்கம் சார்பாக பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டு மொத்த சுத்தம் செய்தல், குடிநீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குடியிருப்பு மற்றும் நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் கழிவுகளை தடை செய்தல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்துதல், தூய்மை மற்றும் பசுமையான ஊராட்சியை உருவாக்குதல் குறித்து விழிப்புணர்வு பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களிடையே பாதுகாப்பான சுகாதாரத்தையும், அவர்களுடைய வாழ்வா தாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.
திட மற்றும் திரவ கழிவினை முறையாக தரம் பிரித்து, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, அதற்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய துணி பைகள் பயன்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை தவிர்ப்பதன் மூலம் சுற்றுப்புறத்தினை பசுமைகயாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, ஊராட்சி களில் குப்பைகள் அதிகம் உள்ள இடங்களை தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் பெருவாரியான தூய்மைப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.கோவிந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன், தாசில்தார் நீலமேகம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுசித்ரா, ஒன்றிய குழு தலைவர் அம்சா ராஜன், ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.






