என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடலில் குறையிருந்தாலும், கல்வி ஆர்வம் குறையவில்லை:  ஓசூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் அரசுக்கு கோரிக்கை
    X

    உடலில் குறையிருந்தாலும், கல்வி ஆர்வம் குறையவில்லை: ஓசூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் அரசுக்கு கோரிக்கை

    • அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவதற்கு தனியார் வாடகை ஆட்டோவை நம்பி இருக்கிறார்.
    • தினக்கூலியான மாணவனின் தந்தை தனக்கு நாளொன்றுக்கு வரும் வருவாயில் ஒரு நாளைக்கு தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று வர 200 ரூபாய் செலவாகிறது.

    ஓசூர்,

    ஓசூர் வாணியர் தெருவில் வசித்து வரும், குமார் - சரிதா தம்பதியினருக்கு. சக்திவேல் மற்றும் மாதேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சக்திவேல் பிறவியிலேயே கை மற்றும் கால் பகுதிகளில் ஊனம் ஏற்பட்டு மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். இவர் ஓசூரில் உள்ள பள்ளியில் தற்பொழுது பிளஸ் ஒன் படித்து வருகிறார். அதேபோல இவரது இரண்டாவது மகன் மாதேஷ் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    குடும்பத் தலைவரான குமார்,கொரோனா காலகட்டத்திற்கு முன்பு தினமும் சுமார் 10 பேருக்கு கூலி வேலை வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு பூ மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

    கொரோனாவுக்கு பிறகு அவரது குடும்பத்தையே வறுமை புரட்டிப் போட்ட நிலையில், தற்பொழுது அவர் அதே மார்க்கெட்டில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார்.

    பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான தனது மூத்த மகனுக்காக குடும்பப் போராட்டங்களுக்கு இடையே மருத்துவ செலவினங்கள் செய்து 6 அறுவை சிகிச்சைகள் செய்தும் ஓரளவு மற்றொருவரின் ஆதரவுடன் நடந்து செல்லும் அளவு குணப்படுத்தி இருக்கிறார்.

    இந்த சூழலில் மாணவனும் கடந்த ஆண்டு நடைபெற்ற10-ம் வகுப்பு தேர்வில் 417 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளியிலேயே இரண்டாவது மாணவனாக வந்து சாதனை படைத்துள்ளார்.

    இவ்வாறான கல்வி பயில வேண்டும் என்கின்ற ஆர்வம் உடைய தனது மகன், வெகு தொலைவிற்கு நடந்து செல்ல இயலாத நிலையில் உள்ள மாற்றத்திறனாளி என்பதால், தினமும் இவரது வீட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவதற்கு தனியார் வாடகை ஆட்டோவை நம்பி இருக்கிறார்.

    இந்த நிலையில் தினக்கூலியான மாணவனின் தந்தை தனக்கு நாளொன்றுக்கு வரும் வருவாயில் ஒரு நாளைக்கு தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று வர 200 ரூபாய் செலவாகிறது என்றும் மீதமுள்ளவை வைத்து தனது 82 வயது தாய் மற்றும் குடும்பத்தை நடத்துவது என்பது பெரிய போராட்டமாக உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

    மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை போதாத நிலையில் தனது மகன் தினமும் பள்ளிக்கு சென்று வர அரசு எந்த வகையிலாவது உதவிட முன் வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இல்லத்தரசியாக இருக்கும் மாணவனின் தாயாரும் தனது மகனுக்காக அரசு உதவி செய்ய கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

    அதேபோல கல்வியில் சிறந்து விளங்கும் தனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதால், இன்னமும் இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு தினமும் சென்று வருவதற்கும் தனது குடும்பத்தின் கடுமையான வறுமையை போக்கவும், தமிழக அரசு தனது நிலைமையை கனிவுடன் பரிசீலித்து உரிய உதவிகள் செய்ய வேண்டும் என மாணவரும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    பள்ளிக்குச் சென்று வரவும், குடும்ப வறுமை காரணமாக மிகவும் சிரமப்படும் அரசு பள்ளி மாற்றத்திறனாளி மாணவனின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே பெற்றோர்களின் உருக்கமான கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×