search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர் பிடிப்பில் மீண்டும் கன மழை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியை கடந்தது
    X

    கோப்பு படம்.

    நீர் பிடிப்பில் மீண்டும் கன மழை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120 அடியை கடந்தது

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 120.40 அடியாக உயர்ந்துள்ளது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கையடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கி சில நாட்களிலேயே நின்று போனது.

    இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த 11-ந் தேதி அதிகபட்சமாக அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியது. அவ்வப்போது லேசான மழை பெய்த போதும் அணைக்கு நீர் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை.

    அதே வேளையில் பாசனத்துக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

    குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக இருந்தது.

    இன்று காலை அணையின் நீர் மட்டம் 120.40 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 737 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1092 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2707 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கையடைந்துள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் 49.31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் குடிநீருக்காக மட்டும் 69 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1903 மில்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 76.62 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 20.6, தேக்கடி 14.4, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அைண 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×