என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    22 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழாவில் மாடு மாலை தாண்டும் போட்டி
    X

    மாடு மாலைதாண்டும் போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்ட காளைகள்.

    22 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழாவில் மாடு மாலை தாண்டும் போட்டி

    • திருவிழாவில் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட 96 கிராமங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர்.
    • அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாடுகளுக்கு புனித தீர்த்தம் தெளித்து மாடுகள் மாலை தாண்டும் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அருகே மல்லநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற ஜக்காலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 22- ஆண்டுகளுக்கு பின்பு இந்தாண்டு கடந்த 17-ந்நேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. பெரியூர்பட்டி பெரியநாயக்கர் ராஜ்குமார் தலைமையிலும், ஊர் நாயக்கர் தங்கபாண்டியன் முன்னிலையிலும் நடந்தது. முதல் நாள் தேவராட்டமும், 2-ம் நாள் ஜக்காலம்மனுக்கு கம்பு கொழுக்கட்டை படையல் போட்டு வழிபாடும் நடந்தது.

    இந்த திருவிழாவில் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட 96 கிராமங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆண்களின் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும் தலையில் துண்டும் கட்டியிருந்தனர்.

    முக்கிய நிகழ்ச்சியான அதில் அந்த சமுதாய மக்கள் சடங்குகள் செய்து 14 மந்தைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சாமி மாடுகளை அழைத்து வந்து கோவில் முன் பூஜைகள் செய்யப்பட்டது.

    சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கருத்தநாயக்கர் மந்தை எல்லைசாமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாடுகளுக்கு புனித தீர்த்தம் தெளித்து மாடுகள் மாலை தாண்டும் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.

    பின்னர் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் தரையில் போடப்பட்டிருந்த வெள்ளை துணியை தாண்ட வைத்தனர். இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 200 சாமி மாடுகள் பங்கேற்றது. மாலை தாண்டுதலில் முதல் 2-வது மற்றும் 3-வது வந்த சாமி மாடுகள் கவுரவிக்கப்பட்டது. முன்னதாக திருவிழாவில் பொதில் போடுதல், சேர்வை ஆட்டம், கும்மியடி மற்றும் தேவராட்டம் ஆடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஓடிவந்த மாட்டின் மீது சமூக வழக்கப்படி கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடி தூவப்பட்டு, எலுமிச்சைப்பழம் வெற்றி பரிசாக வழங்கப்பட்டது.

    பின்னர் 3 கன்னி பெண்களும் எல்லை கோட்டில் இருந்து தேவராட்டத்துடன் ஜக்காலம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அனைத்து மந்தையர்களையும் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனையுடன் திருவிழா முடிவடைந்தது.

    திருவிழாஏற்பாடுகளை கரைபெரியதனக்காரர்கள், கோடாங்கிநாயக்கர்கள், கம்பிளிநாயக்கர்கள், ஊர் நாயக்கர்கள், ஊர் பொதுமக்கள், ராஜ கம்பளத்தார், நாயக்கர்கள் மல்லநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×