என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் கொலையில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் மனோகரன். அ.தி.மு.க. பிரமுகர். இவர் கடந்த மே மாதம் 15-ந் தேதி குருவி மேடு என்ற இடத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இரவு குடும்பத்துடன் தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது லாரி ஒன்று திடீரென கார் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த மர்மகும்பல் ஊராட்சி தலைவர் மனோகரனை அவரது மனைவி, குழந்தைகள் கண் முன்னேயே சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இந்த கொலை வழக்கில் மீஞ்சூர் போலீசார் ஏற்கனவே சுந்தர பாண்டியன், பத்மநாபன், அரவிந்த் குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பல் கழிவுகளை லாரி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற் கொண்டு வந்ததில் ஏற்பட்ட தொழில் போட்டியில் ஊராட்சி தலைவர் மனோகரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் கொலைவழக்கில் கைதான சுந்தரபாண்டியன், பத்மநாபன் உள்பட 10 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.






