என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கட்சிக்கு எதிராக துரோகம் செய்தவர்கள்- மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
- முன்னாள்அமைச்சர் கே.பி.முனுசாமியும், நானும் தேர்தலில் வெற்றி பெற்று விட கூடாது என்பதற்காக ரூ.4 கோடி வரையில் செலவு செய்தவர் கோவிந்தராஜ்.
- கிருஷ்ணமூர்த்தி அவர் இருந்த கட்சியில் விசுவாசமாக இல்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளனர்.
அப்போது பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ், இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். இதற்காக அவருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒரு நாள் கூட முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஓட்டு சேகரிக்க வரவில்லை.
முன்னாள்அமைச்சர் கே.பி.முனுசாமியும், நானும் தேர்தலில் வெற்றி பெற்று விட கூடாது என்பதற்காக ரூ.4 கோடி வரையில் செலவு செய்தவர் கோவிந்தராஜ். கட்சிக்கு எதிராக துரோகம் செய்தவர் அவர்.
அதே போல கிருஷ்ணமூர்த்தி அவர் இருந்த கட்சியில் விசுவாசமாக இல்லை. அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் பதவிக்கு வர அனைவரும் கடுமையான உழைக்க வேண்டும். மற்றவர்கள் பதவிக்கு வந்தால் அவர்கள் ஒதுங்கி கொள்வார்கள்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக கட்சி நிகழ்ச்சிகளில் எதிலும் அவர்கள் பங்கேற்றது கிடையாது. 12 ஒன்றிய செயலாளர்கள், 2 பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி வந்த போது எழுச்சியாக மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
கிருஷ்ணகிரியை பொறுத்தவரையில் கே.பி.முனுசாமி வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிசாமி பக்கம் அ.தி.மு.க.வினர் ஒரு அணியாக உள்ளனர். 2 ஆயிரம் கிளை கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம், அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் ஆவின் தலைவர் ெதன்னரசு, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் கேசவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






