என் மலர்
உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி- பனை ஓலை அச்சு கண்டு பிடிப்பு
- தட்டையான வடிவில் முதுமக்கள் தாழியின் மூடி கண்டெடுப்பு.
- 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பனை சார்ந்த பொருள் பயன்பாடு.
சிவகளை:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதிச்சநல்லூர் பரும்பு, பாண்டியராஜா கோவில், கால்வாய் ரோடு, புளியங்குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 8 பிரிவுகளாக அகழாய்வு செய்யப்படுகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான காதணி, நெற்றிப்பட்டயம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சங்ககால மக்களின் வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்றைய பணியின்போது தட்டையான வடிவில் முதுமக்கள் தாழியின் மூடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பனை ஓலைப்பாய் அச்சுகள் இருந்துள்ளது. அந்த அச்சுகள் பனை ஓலையால் ஆனதா அல்லது கோரைப்புல்லில் நெய்யப்பட்டதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதுமக்கள் தாழிகள் செய்யும் போது, அதனை காய வைப்பதற்கு இந்த பனை ஓலை பாய் அல்லது கோரைப்பாயின் மேல் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளது உறுதி ஆகி உள்ளது. ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் பழமையான நாகரித்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்து வருவதால் தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.






