search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுமுறை நாட்களில் பால் கறந்து மருத்துவம் படிக்கும் இளம்பெண்
    X

    பால் கறக்கும் சூரியகலா (உள்படம்: தாய் தந்தையுடன்)

    விடுமுறை நாட்களில் பால் கறந்து மருத்துவம் படிக்கும் இளம்பெண்

    • இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மாடுகளிடம் கறந்த பாலை சேகரித்து விநியோகம் செய்து வருகிறார்.
    • பல் மருத்துவமனையில் சேர்ந்த போதிலும் தனது பால் விநியோக வேலையை உற்சாகத்துடன் செய்து வருகிறார்.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் பல்வேறு நிலைகளில் மாணவியர் தற்கொலை செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதில் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

    இந்த சூழ்நிலையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவி ஒருவர் தற்போது மருத்துவம் படித்தாலும் தன் குடும்ப நலனுக்காகவும் தந்தையின்உதவிக்காகவும் விடுமுறை நாட்களில் வீடுகள் தோறும் மாடுகளை பால் கறந்து பாலை சேமித்து வீடுகள், தேனீர் கடைகளுக்கு வழங்கியும் வருகிறார். ஆணுக்கிங்கே இளைப்பில்லை‌ என்ற மகாகவி பாரதியாரின் கூற்றை நிரூபிக்கும் புதுமைப் பெண் இவர்.

    பூதலூர் ஒன்றியம் செல்லப்பன் பேட்டை கிராமம் வானம் பார்த்த பூமி. இந்த கிராமத்தில் உள்ள 2 ஏரிகள் நிரம்பினால் தான் இந்த கிராமத்தில் விவசாயம் நடைபெறும். இந்த கிராமத்தில் உள்ள விவசாயி நடராஜன்- செந்தமிழ் செல்வி தம்பதியரின் 2வது மகளாக பிறந்தவர் சூரியகலா (வயது21).

    2018ம் ஆண்டில் முழுவதும் தமிழ் வழியில் பயின்ற சூரியகலா யாருடைய உதவியும் இன்றி நீட் தேர்வை எதிர் கொண்டுள்ளார். அதில் 200 மதிப்பெண் பெற்று தனியார் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற போதிலும் தன்னுடைய குடும்ப சூழ்நிலை மனதில் கொண்டு யாரிடம் என்ன எப்படி கேட்பது என்று தயங்கிய நிலையில், இவருடைய உறவினர் ஒருவர் இவரை இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தரிடம் அழைத்துச் சென்று நிலைமையைகூறியுள்ளார். அவர் உடனடியாக பல் மருத்துவமனையில் இடம் கொடுத்து சில சலுகைகளையும் கொடுத்துள்ளார்.

    தற்போது சென்னையில் காட்டாங்குளத்தூரில் பல் மருத்துவமனையில் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவி சூரியகலா விடுமுறை நாட்களில் செல்லப்பன்பேட்டை கிராமத்திற்கு வரும்போது தனது தந்தையை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, தனது கிராமத்தில் காலையும், மாலையும் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மாடுகளை கறந்து பாலை சேகரித்து பூதலூர் வரை எடுத்து சென்று விநியோகம் செய்து வருகிறார்.

    இதுகுறித்து கேள்விப்பட்டு அவருடைய கிராமத்திற்கு சென்ற போது தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் பால் கறக்க வேகமாக சென்றவரை தொடர்ந்து போன போது அவர் ஒரு வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு கன்று குட்டியை அவிழ்த்துவிட்டு அதை இழுத்துக்கட்டி விட்டு லாவகமாக கீழே உட்கார்ந்து பாலை கறக்கத் தொடங்கினார். கறந்து முடிந்ததும் வீட்டுக்காரர்களுக்கு தேவையான பாலை கொடுத்துவிட்டு மீதத்தை அளந்து அவரிடம் உள்ள பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு பறந்து சென்றார்

    ஒவ்வொரு நாளும் காலை 50 லிட்டரும் மாலையில் 40 லிட்டருமாக தானே வீடுகள் தோறும் சென்று கறந்து அவற்றை விநியோகம் செய்து வருகிறார்.எட்டாம் வகுப்பில் இருந்து தனது தந்தைக்கு உதவியாக இந்த செய்து வருவதாக கூறும் சூரியகலா முதலில் இதைஎல்லாம் செய்ய வேண்டாம் என்று தடுத்த தந்தை, காலப்போக்கில் மாடுகளில் பால் கறப்பதற்கான எளிய உத்திகளை சொல்லிக் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் தான் முயற்சி செய்து தற்போது அதை வெற்றிகரமாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

    தொடக்கப் பள்ளியில் படித்த போதும், அதன் பின்னர் உயர்நிலையில் பள்ளியில் படித்த போதும், அதனை தொடர்ந்து பல் மருத்துவமனையில் சேர்ந்த போதிலும் தனது பால் விநியோக வேலையை உற்சாகத்துடன் செய்து வருவதாக கூறும் சூரியகலா,

    தற்போது பயிலும் கல்லூரியில் பாரிவேந்தரின் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளராக இருப்பதாகவும், கவிதை போட்டியிலும் பரிசு பங்கு பெற்று பரிசு பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்.

    பல் மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்கவும் உதவிகளை எதிர்பார்க்கும் இந்த மாணவி அதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.ஆனால் எது வந்தாலும் சமாளிப்பேன், தந்தைக்கு உதவியாக இருப்பேன் பல்மருத்துவத்திலும் சாதனை படைப்பேன் என்கிறார் எதிர் கால பல் மருத்துவர் விடுமுறை கால‌பால்கார சூரியகலா!!

    Next Story
    ×