என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் மலிவு விலை தக்காளியை வாங்க குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
திண்டுக்கல் மார்க்கெட்டில் 2-வது வாரமாக தக்காளியை கிலோ ரூ.60க்கு விற்ற வியாபாரி
- இன்று ஒரு நபருக்கு 2 கிலோ தக்காளி வழங்கினார்.
- அனைத்து தரப்பினரும் தக்காளியை வாங்கி பயன்படுத்தும் வகையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முன் வந்ததாக தெரிவித்தார்
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் தக்காளி விலை கடந்த 1 மாதத்திற்கு மேலாக விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் இதனை வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். திண்டுக்கல் மார்க்கெட்டில் கடந்த 3 வாரங்களாக ரூ. 100 க்கு தக்காளி விற்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்து வந்த போதிலும் பல கடைகளில் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் காந்தி காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளி யானது. தக்காளி வியாபாரி யான சந்தோஷ் முத்து கடந்த வாரமும் இதேபோல் நபருக்கு ஒரு கிலோ தக்காளி வழங்கினார். இன்று ஒரு நபருக்கு 2 கிலோ தக்காளி வழங்கினார். இது குறித்து அறிவிப்பு வெளி யிட்டவுடன் பொதுமக்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் குவியத் தொடங்கினர். திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த சந்தோஷ்முத்து காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சேவையுடன் அனைத்து தரப்பினரும் தக்காளியை வாங்கி பயன்படுத்தும் வகையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முன் வந்ததாக தெரிவித்தார். இதனை அறிந்த பொது மக்கள் காலை 6 மணிக்கே கடையில் குவிந்தனர். வரிசையில் நின்று தக்காளியை ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
இது குறித்து தக்காளி வியாபாரி கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாக தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன்.
கடந்த வாரம் 5 டன் தக்காளி வரவழைக்கப்பட்டு ஒரு நபருக்கு 1 கிலோ தக்காளி ரூ.60க்கு வழங்கினேன். அதேபோல் இன்று 1 கிலோ ரூ.60 என்ற விலையில் 2 கிலோ வழங்கி வருகிறேன். இன்று 8 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு தக்காளி வழங்கப்படாது. பொதுமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றார். மேலும் அடுத்த வாரமும் தக்காளி விலை நிலவரத்தைப் பொறுத்து மலிவு விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.
1 கிலோ தக்காளி ரூ.60க்கு மீண்டும் விற்பனை செய்ய ப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள் வந்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.






