என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி வக்கீல் கொலையில் குற்றவாளிகள் சரண் அடைய திட்டம்?
- தேசிய நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- குற்ற வாளிகள், கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வக்கீல் சிவக்குமார் (வயது 44). இவர் கடந்த 23-ந் தேதி இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது காரில் உடல் மீட்கப்பட்டது.
இக்கொலை தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில், 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அவை வருமாறு:-
வக்கீல் சிவக்குமாரிடம் தொடர்பு கொண்ட நபர்கள், குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் தங்கள் குட்கா வாகனம் சிக்கியதாக கூறி அவரை கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் அன்று அப்படி எந்த ஒரு சம்பவமும் நிகழவில்லை. மேலும் குட்கா வழக்கில் எந்த வாகனமும் பறிமுதல் செய்து வைக்கப்படவில்லை. வக்கீல் சிவக்குமாருக்கு சமீப காலமாக சிலரிடம் பிரச்னை இருந்துள்ளது.
அதில், சிலர் திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் வக்கீல் சிவக்குமார் கொலையில் தொடர்புடைய குற்ற வாளிகள், கோர்ட்டில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வக்கீலை கொலை செய்து உள்ளதால் சக வக்கீல்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜர் ஆக கூடாது என்றும் வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.






