என் மலர்
உள்ளூர் செய்திகள்

பராமரிப்பின்றி காணப்படும் காந்தியின் நினைவுச் சின்னம்
- காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம்
- இந்நூலுக்கு சத்தியசோதனை என்று பெயர்
அன்னதானப்பட்டி:
சத்திய சோதனை என்பது மகாத்மா காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனாலேயே இந்நூலுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார். உலகளவில் இன்றளவும் இந்த நூலுக்கு தனி மவுசு உண்டு. இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலின் தலைப்பில் சேலத்தில் உள்ள ஒரு நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்ப டுவது வேதனையான உண்மை ஆகும்.
சேலம் செவ்வாய்பேட்டை தேர் நிலையம் அருகே தான், காந்தியின் இந்த "சத்திய சோதனை " நினைவுச் சின்னம் உள்ளது. மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார். அவ்வாறு அவர் சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அந்த பகுதியில் அரிய பழங்கால வரலாற்று சின்னம் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் பரிதாபமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து தக்க நடவடிக்கைகள் எடுத்து, காந்தியின் வரலாற்று நினைவுச் சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






