என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்தோடு ஆவின் நிறுவனத்தில் மேலாளர்கள் உள்பட 8 பேர் ஒரே நாளில் பணி ஓய்வு
- பாராட்டு விழா ஆவின் நிறுவன வளாகத்தில் பொது மேலாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- மேளதாளங்கள் முழங்க குடைப் பிடித்தபடி ஆவின் வளாகத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அம்மாபேட்டை:
சித்தோடு ஆவின் நிறுவனத்தில் 2 மேலாளர்கள் உட்பட 8 ஊழியர்கள் ஒரே நாளில் நேற்று பணி ஓய்வு பெற்றனர்.பணி நிறைவு பெற்ற இவர்களுக்கு சக அதிகாரிகள், அலுவலர்கள் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
ஆவின் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளர் (உற்பத்தி) ஏ.சுப்பிரமணியன், உதவி பொது மேலாளர் (தரக்கட்டுப்பாடு) ஏ.சுப்பிரமணியம் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குமரேசன், கணேசன், தனபால், ராமசாமி, மணிமேகலை, மேனகா ஆகியோர் பணிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து நேற்று பணி ஓய்வு பெற்றனர்.
இவர்களுக்கு பாராட்டு விழா ஆவின் நிறுவன வளாகத்தில் பொது மேலாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற ஊழியர்களை பாராட்டி ஆவின் நிர்வாக குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான என்.ஆர்.கோவிந்தராஜர் பேசினார்.
அப்போது ஓய்வு பெரும் ஊழியர்களின் மனைவி,கணவன் மற்றும் பிள்ளைகளே உங்களுக்காகவும் உங்கள் வாழ்வின் உயர்வுக்காகவும் இரவு, பகல் பாராமல் உழைத்த இவர்களை ஓய்வுக்கு பின் மனம் கோணாமல் அன்பாகவும் பண்பாகவும் பணிவாகவும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அவர்களுக்கு செய்யும் பெரிய கடமையாகும் என அறிவுரை கூறினார்.
இந்நிகழ்ச்சியில், அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.ஆர்.ராமலிங்கம், நிர்வாகிகள் பழனிச்சாமி, அன்பழகன், குணசேகரன், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பணி நிறைவு பெற்ற அனைவருக்கும் மாலை அணிவித்து,பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், மேளதாளங்கள் முழங்க குடைப் பிடித்தபடி ஆவின் வளாகத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.






