என் மலர்
உள்ளூர் செய்திகள்

75-வது சுதந்திர தின பெருவிழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுவது தொடர்பாக கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி காணொலி காட்சி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.
75-வது சுதந்திர தின பெருவிழா: அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியினை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
- அனைத்து வீடுகளின் கூரைகளிலும் தேசியக் கொடியினை பறக்க விட வேண்டும்.
- தேசியக் கொடியை திறந்த வெளியிலோ, குப்பைத் தொட்டியிலோ, வயல்வெளியிலோ எறியக் கூடாது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 333 கிராம ஊராட்சிகள், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு 75-வது சுதந்திர தினப் பெருவிழாவினை கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தை வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து பஞ்சாயத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியினை ஏற்றி சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, காணொலிக் காட்சி வாயிலாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தி லுள்ள அனைத்து வட்டா ரத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து வீடுகளின் கூரைகளிலும் தேசியக் கொடியினை பறக்க விட வேண்டும்.
அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றிய பிறகு பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும். தேசியக்கொடியின் புனிதத் தன்மையைப் பேணும் வகையில் மற்றும் எந்தவித அலட்சியமும், அவமரியாதையும் இன்றி கையாளுதல் வேண்டும்.
தேசியக் கொடியை திறந்த வெளியிலோ, குப்பைத் தொட்டியிலோ, வயல்வெளியிலோ எறியக் கூடாது. எனவே, 75-வது சுதந்திர தினப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாட முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






