என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பூக்களை படத்தில் காணலாம்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமையை ஒட்டி தருமபுரி பூ மார்க்கெட்டில் 7 டன் பூக்கள் விற்பனை
- வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளது.
- போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பிக்கிலி, பெரியூர், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், தொப்பூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழிகொண்டை, அரளி உள்ளிட்ட பூ வகைகளை பயிர் செய்து வருகின்றனர். இந்த பூக்கள் அனைத்தும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூக்கள் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் சனிக்கிழமை தோறும் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் மற்றும் இந்துக்கள் வீடுகளிலும் சனிக்கிழமை தோறும் இதனை பண்டிகையாக கொண்டாடுவர். இந்த விசேஷ நாட்களில் பூக்களின் தேவை அதிகரிக்கும். அதனால் புரட்டாசி மாதத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பூக்களின் வரத்து அதிகரிக்கும். அந்த வகையில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையான இன்றும், நேற்றும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டில் 7 டன் பூக்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில் சாமந்தி பூ கிலோ 30 ரூபாய், பட்டன் ரோஸ் கிலோ 40 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 40 ரூபாய், சம்பங்கி கிலோ 40 ரூபாய், அரளி கிலோ 60 ரூபாய், குண்டுமல்லி கிலோ 350 ரூபாய், சன்னமல்லி கிலோ 250 ரூபாய், கனகாமரம் கிலோ 300 ரூபாய், கோழி கொண்டை கிலோ 20 ரூபாய், செண்டு மல்லி கிலோ 10 முதல் 20 ரூபாயும், காக்கட்டா கிலோ ரூ. 200 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.
ஏழு டன் பூக்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.






