search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் 610 குழந்தைகளுக்கு மடிக்கணினி, தங்கப்பதக்க விருது
    X

    பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு, மடிக்கணினி, தங்க நாணயங்களை ஐ.வி.டி.பி. நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் வழங்கிய போது எடுத்த படம்.

    ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சார்பில் 610 குழந்தைகளுக்கு மடிக்கணினி, தங்கப்பதக்க விருது

    • மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 638 மதிப்பில் ஒரு கிராம் தங்க நாணயங்கள் விருதாக வழங்கப்பட்டது.
    • மொத்தம் 610 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.வி.டி.பி. கோசலை விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டின் கோசலை விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.22 ஆயிரத்து 552 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்களும், 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரத்து 913 மதிப்பிலான லெனோவா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டது.

    மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற ஏனைய மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 638 மதிப்பில் ஒரு கிராம் தங்க நாணயங்கள் விருதாக வழங்கப்பட்டது.

    மொத்தம் 610 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.

    ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் நாமக்கல் தமிழ் சங்க செயலாளர் கோபால நாராயண மூர்த்தி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் கூடுதல் முதல்வர் மரிய ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    அவர்கள் பேசுகையில் மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் மென்மேலும் உயர ஊக்கமளித்து வாழ்த்துக்களை கூறி பேசினார்கள்.

    மேலும் தமிழ்நாடு கிராம வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர்கள், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர், வேலூர் அக்சிலியம் கல்லூரியின் முன்னாள் முதல்வர் யூஜினி, கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஐ.வி.டி.பி. நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜோஸ்வா, நந்தினி ஜோஸ்வா ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ரூ.36.95 கோடியில் கல்வி பணி

    இதுவரை ஐ.வி.டி.பி. கோசலை விருது திட்டத்திற்காக மட்டும் ரூ.4.69 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும், கல்வி பணிக்காக மட்டும் ரூ.36 கோடியே 95 லட்சம் ஐ.வி.டி.பி. நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக ஐ.வி.டி.பி. தலைவர் குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

    Next Story
    ×