search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி கருத்து கேட்பு- மின்னஞ்சலில் குவிந்த 600 மனுக்கள்
    X

    சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி கருத்து கேட்பு- மின்னஞ்சலில் குவிந்த 600 மனுக்கள்

    • சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி ஏராளமானோர் மனு கொடுக்க வந்தனர்.
    • ஆய்வு செய்ய வந்த சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை.

    கடலூர்:

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவில் வரவு-செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்றும், 2 நாட்கள் ஆய்வு செய்வோம் என்றும் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நோட்டீசு வழங்கினர்.

    இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 7, 8-ந் தேதிகளில் ஆய்வு செய்ய வந்த சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை. வரவு-செலவு கணக்குகளையும் காட்டவில்லை. மாறாக நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு-செலவு கணக்குகளை ஒப்படைப்போம். இல்லையென்றால் வரவு-செலவு கணக்குகளை காட்ட முடியாது என்று தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.

    இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர், இது பற்றி ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறி சென்றனர்.

    இதற்கிடையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பொதுமக்கள் ஆலோசனை மற்றும் கருத்து கூறலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இதன்படி கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையரிடம் இன்று (திங்கட்கிழமை ), நாளை (செவ்வாய்க்கிழமை ) ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் நேரில் ஆலோசனை மற்றும் கருத்துகளை கூறலாம். இது தவிர தபால் மூலமாகவும், vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் கருத்துகளை அனுப்ப அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி இன்று காலை துணை ஆணையர் மின்னஞ்சலில் 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன. இதுதவிர நடராஜர் கோவில் பற்றி ஏராளமானோர் நேரில் மனு கொடுக்க வந்தனர். இதனால் துணை ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. நாளை மாலை வரை மனுக்கள் வழங்க அவகாசம் உள்ளதால் இன்னும் ஏராளமான மனுக்கள் குவிய வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×