என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேக்வாண்டோ விளையாட்டு தேர்வுப் போட்டிகளில் 52 பேர் பங்கேற்பு
- விளையாட்டு விடுதிக்கு மாணவ, மாணவியர் 57 பேர் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டனர்.
- மொத்தம் 52 பேர் மாநில அளவிலான தேக்வாண்டோ விளையாட்டு தேர்வுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2023-2024-ம் ஆண்டு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு விடுதிக்கு 6, 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தேக்வாண்டோ விளையாட்டிற்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
முன்னதாக விளையாட்டு விடுதிக்கு மாணவ, மாணவியர் 57 பேர் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுள் விளையாட்டு விடுதிக்கு 39 மாணவர்கள் மற்றும் 10 மாணவியர்களும், முதன்மை நிலை விளையாட்டு விடுதிக்கு 3 மாணவர்கள் என மொத்தம் 52 பேர் மாநில அளவிலான தேக்வாண்டோ விளையாட்டு தேர்வுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
தேர்வுப் போட்டியினை திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, விளையாட்டு வீரர் மாதையன், தேக்வோண்டா பயிற்றுனர்கள் சங்கர், பரணிதேவி, இளவரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.






