search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 ஆயிரம் கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: கள்ளுக்கான தடையை நீக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
    X

    தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர்

    4 ஆயிரம் கி.மீ. விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: கள்ளுக்கான தடையை நீக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

    • மதுவிலக்கு சட்டத்தில் 2017-ம் ஆண்டு பதநீர் விற்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
    • பனை தொழில் தொடர்புடைய சுமார் 30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை :

    தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க கோரியும், பனை ஏறுவோருக்கு எதிராக நடக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்தும் பனை மரத்தின் மகத்துவம் குறித்தும் தமிழகத்தின் 33 மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநில எல்லைகளிலும் 79 நாட்கள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து சென்னையில் நேற்று தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர்.

    அதைத்தொடர்ந்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் பாண்டியன், பெருமாள் உள்ளிட்டோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கள்ளுக்கான தடை காரணமாக பனை ஏறுவோர் மட்டும் அல்லாமல் பனை தொழில் தொடர்புடைய சுமார் 30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    மதுவிலக்கு சட்டத்தில் 2017-ம் ஆண்டு பதநீர் விற்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிறகும் பனை ஏறுவோர் மீது போலீசார் விஷ சாராய வழக்கு போட்டு சிறையில் தள்ளுவதும், போலீசாரால் மரியாதை குறைவாக நடத்தப்படுவதும் மனித உரிமை மீறலாகும். சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும், இதுவரை ஒரு வழக்குகூட இந்த சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்படவில்லை.

    எனவே, பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சுவதற்கு தமிழ்நாடு மதுவிலக்கு பிரிவின் கீழ் உரிமம் வழங்குவதை நிறுத்திவிட்டு, பதநீரை சுதந்திரமாக இறக்கிக் கொள்ளவும், பதநீரில் கலப்படம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றால் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உண்மையான பனை ஏறுவோரை மட்டுமே தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். மேலும் கள் மீதான தடையை நீக்கி, பனை சார்ந்த தொழில்களுக்கு உரிய அங்கீகாரமும், உதவிகளும் அரசு தரப்பில் இருந்து வழங்க வேண்டும்.

    இது தொடர்பாக, நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×