என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் சாமியாடி பக்தர்களுக்கு குறிசொல்லப்பட்டது.
கொடைக்கானலில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீமன் கோவில் திருவிழா
- வருடந்தோறும் தை மாதம் பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாமி கும்பிட்டு நேர்ச்சை நிறைவேற்றுவது வழக்கம்.
- பழங்குடியின மக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பீமனை சாமி தரிசனம் செய்து அசைவ விருந்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு வனப்பகுதியின் நடுவே 6அடி பீமன் சிலை உள்ள கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலை இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் பேத்துப்பாறை பொதுமக்கள் பராமரித்து வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில் வருடந்தோறும் தை மாதம் பழங்குடியின மக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாமி கும்பிட்டு நேர்ச்சை நிறைவேற்றுவது வழக்கம். அதன்படி பீமன் கோவிலில் திருவிழாதொடங்கியது. விவசாயம் செழிப்பதற்கும், இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் பழங்குடியின மற்றும் பேத்துப்பாறை கிராம மக்கள் பீமனுக்கு வழிபாடு நடத்தி ஆடு, கோழி, காய், கனிகள் காணிக்கையாக பீமனுக்கு படைக்கப்பட்டது.
இதில் பழங்குடியின மக்களின் குரவி கூற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பழங்குடியினர் நெருப்பின் மீது நின்றும் வனப்பகுதியில் உள்ள சாட்டைகள் போன்ற தாவரத்தை கொண்டு கை, கால் மற்றும் உடம்பில் அடித்து பக்தர்களுக்கு குறி சொல்லி வருகின்றனர்.
வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு கொடைக்கானல் சுற்றுவட்டார மலைக்கிராம பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பீமனை சாமி தரிசனம் செய்து அசைவ விருந்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.
மேலும் பீமன் சாமியை வழிபாடு செய்திட பேத்துப்பாறை கிராமத்தில் இருந்த சுமார் 4கிலோ மீட்டர் வனப்பகுதிக்குள் நடந்து சென்றும், ஆற்றை கடந்து சென்றிட அக்கறைக்கும், இக்கரைக்கும் கயிறை கட்டி சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர், இந்த விழாவில் பொதுமக்களுடன் பீமன் சாமி கலந்து கொள்வதாக இன்றளவிலும் நம்பப்படுகிறது. இந்த கோவிலானது 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.






