என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையில் கொள்ளை வழக்கில் மேலும் 3 பேர் கைது
- கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்து, மாதேவை மிரட்டி பணத்தை பறித்து செல்லாம் என திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.
- ஒரு கும்பல் மாதேசை மிரட்டி பணம் ரூ.4 லட்சத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த தபால்மேடு டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றுபவர் மாதேஷ் (வயது 48). இவர், கடந்த, 19-ந் தேதி இரவு, 10 மணிக்கு டாஸ்மாக் கடையை மூடி வெளியே வந்தபோது அவரது கழுத்தில் கத்தியை வைத்து, ரூ.4 லட்சத்தை 2 மோட்டார்சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இதுகுறித்து மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான எண்களை ஆராய்ந்த போது ஓசூரை சேர்ந்த சிலர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ஓசூர் சக்தி நகர் சந்தோஷ் (23), முனீஸ்வரன் நகர் கோகுல் (21), வேலூர் மாவட்டம், குடியாத்தம் சூர்யா (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஓசூர் வ.உ.சி. நகரை சேர்ந்த முருகேசன் (32), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அருள்நிதி (36), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த அஜித் (27) ஆகியோருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரிய வந்தன. அவை வருமாறு:-
கைதான அஜித் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர். அவர் பர்கூர் தபால் மேடு பகுதியில் மதுக்கடை அருகில் உள்ள பாரில் வேலை செய்து வருகிறார். அவர் தினமும் விற்பனையாளர் மாதேஷ் வசூல் ஆகும் பணத்தை எடுத்து செல்வதை நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவர் சிவகங்கை மற்றும் ஓசூர் பகுதியில் உள்ள தனது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்து, மாதேவை மிரட்டி பணத்தை பறித்து செல்லாம் என திட்டம் போட்டு கொடுத்துள்ளார். அவர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி 10 பேர் சம்பவத்தன்று அங்கு வந்துள்ளனர்.
அவர்களில் ஒரு கும்பல் மாதேசை மிரட்டி பணம் ரூ.4 லட்சத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான அஜித் முதலில் அருள்நிதிக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். பின்னர் மற்ற கொள்ளையர்கள் வந்து இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். கைதான அருள்நிதி மீது சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் வழக்குகள் உள்ளன. இந்த கொள்ளையில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால் இதே போல வேறு எங்கும் கொள்ளை சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி உள்ளார்களா? என தெரிய வரும்.






