என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை பணியின்போது பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியதால் தொழிலாளி பலியானரா?
    X
    பாதாள சாக்கடை பணியின்போது பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியதால் தொழிலாளி பலியானரா?

    பாதாள சாக்கடை பணியின்போது பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியதால் தொழிலாளி பலியானரா?

    பாதாள சாக்கடை பணியில் ஊழியர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை பார்த்ததால் மேற்கண்ட விபத்தில் வாலிபர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை பழைய விளாங்குடி, ராமமூர்த்தி மெயின் ரோட்டில் பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அங்கு நேற்று மாலை 15 மீட்டர் நீளம், 2 அடி அகலம், 13 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அதன்பிறகு அங்கு பைப் லைன் அமைக்கும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளிகள் சதீஷ், கணேசன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த கணேசன் உள்ளிட்ட தொழிலாளர்கள் பதறி அடித்துக் கொண்டு மேலே வந்தனர். இருந்தபோதிலும் சதீஷ் மண்சரிவில் சிக்கி கொண்டார். உடனே அவரை மீட்பதற்கான முயற்சிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவரை உயிருடன் மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சரிந்து விழுந்த மணல் அகற்றப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரத்தில் சதீசின் தலை சிக்கி துண்டிக்கப்பட்டு வெளியே வந்தது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மண்ணில் புதைந்து கிடந்த சதீசின் உடலை மீட்டனர்.

    மதுரை பாதாள சாக்கடை மண்சரிவில் சிக்கி பலியான சதீஷ் (வயது 34), ஈரோடு மாவட்டம், அமராவதி நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு பூஜா (வயது 13), அஸ்வந்த் (வயது 3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    மதுரை கூடல்புதூரில் தங்கி கடந்த 3 மாதங்களாக சதீஷ் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேவி நேற்றுதான் மதுரைக்கு வந்தார். அங்கு கணவருடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருந்துள்ளார். அதன் பிறகு தேவி மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி சென்றார்.

    இந்த நிலையில் தான் அவருக்கு தனது கணவர் விபத்தில் இறந்த தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தேவி மதுரைக்கு மீண்டும் புறப்பட்டு வந்தார்.

    பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தலை வேறு, உடல் வேறாக கிடந்த கணவரின் உடலை பார்த்து தேவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.

    பாதாள சாக்கடை திட்டத்துக்காக மதுரை பழைய விளாங்குடி, ராமமூர்த்தி மெயின் ரோட்டில் 13 அடி ஆழத்துக்கு நேற்று பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அதனை கண்காணிக்கும் அதிகாரி சம்பவ இடத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. அதுவும் தவிர பழைய விளாங்குடி நிலத்தின் தன்மை நெகிழ்வாக இருந்து உள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே கண்டறிந்து, ஒப்பந்த நிறுவனத்தை உஷார்ப்படுத்த தவறி விட்டனர். அதுவும் தவிர பழைய விளாங்குடி, ராமமூர்த்தி மெயின் ரோட்டில் பாதாளசாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும்போது, இதுவரையில் 13 விபத்துக்கள் நடந்து உள்ளன.

    பாதாள சாக்கடை பணியில் ஊழியர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை பார்த்ததால் மேற்கண்ட விபத்தில் வாலிபர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டது, ஒப்பந்த தொழிலாளருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கத் தவறியது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனியார் ஒப்பந்த பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் டிரைவர் சுரேஷ், கண்காணிப்பு அதிகாரி பாலு ஆகிய 3 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பாதாளச் சாக்கடை மண்சரிவின்போது சதீசுடன் இருந்த தொழிலாளி கணேசன் என்பவர் கூறும்போது, நாங்கள் 13 அடி பள்ளத்தில் பைப்லைன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது எதிர்பாராதவிதமாக மண்சரிவு ஏற்பட்டது. எனவே நான் வேக வேகமாக வெளியே வந்தேன். என்னுடன் சதீசும் வேகமாக வெளியே வர முயன்றார். ஆனால் அதற்குள் திடீர் மண்சரிவு ஏற்பட்டதால் அவர் குழிக்குள் பரிதாபமாக சிக்கிக் கொண்டார். பழைய விளாங்குடி விபத்தில் என்னுடன் வேலை பார்த்த சதீஷ், அநியாயமாக பலியானது வேதனை அளிக்கிறது.ஒப்பந்த பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என்றார் .
    Next Story
    ×