என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    1.8 கிலோ தங்க நகைகளுடன் பட்டறை உரிமையாளர் மாயம்

    ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.
    கோவை:

    கோவை பேரூர் மெயின் ரோடு செட்டி வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது53). தங்க நகை வியாபாரி. இவர் கோவை பெரியகடைவீதி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில்  கூறியிருப்பதாவது:-

    நான் தங்க நகைகளை கோவை செட்டி வீதியில் வசித்த கொல்கத்தாவை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் சுஜித் மைட்டி(40), என்பவரிடம் கொடுத்து, அதனை நகை ஆபரணங்களாக மாற்றி பெற்று விற்பனை செய்து வருகிறேன். 

    இந்நிலையில் கடந்த 16-ந் தேதி நான் அவரிடம் 420 கிராம் தங்க நகைகளை கொடுத்து ஆபரணங்களாக மாற்றி தருமாறு கேட்டேன். இதேபோல், எனது நண்பரும் அவரிடம் 578 கிராம் தங்கத்தை கொடுத்தார். ஆனால் சுஜித் மைட்டி எங்களிடம் வாங்கிய நகைகளை ஆபரணங்களாக மாற்றி தராமல் இருந்தார். 

    இதனையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் குறித்து விசாரித்தபோது அவர் தங்கத்துடன் மாயமானது தெரியவந்தது. எனவே அவரை கண்டுபிடித்து எங்களது நகைகளை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதேபோல், செல்வபுரம் இந்திராபுரம் அமல்நகரை சேர்ந்த நகை வியாபாரி சந்தோஷ்(34), என்பவர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது:-

    நான் கோவை செட்டி வீதியில் வசித்த சுஜித் மைட்டி என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தேன். இந்நிலையில், கடந்த மாதம் 7-ந் தேதி நான் 759 கிராம் தங்க நகைகளை ஆபரணங்களாக வடிவமைத்து தருவதற்காக சுஜித் மைட்டியிடம் கொடுத்தேன். ஆனால்  அவர் திருப்பி  கொடுக்காமல் செட்டி வீதியில்  உள்ள வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். எனவே அவரிடம் இருந்து நகைகளை மீட்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

    சுஜித் மைட்டி கோவையில் மொத்தம் 3 பேரிடம் சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான 1.8 கிலோ தங்கத்தை பெற்று மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×