search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.4.50 லட்சம் திருடிய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை தீவிரம்

    கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட பணத்தை கொள்ளையர்களின் கூட்டாளி திரும்ப ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 61 ) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் கடந்த மாதம் 20-ந் தேதி ராமநாதபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.4 லட்சத்து 51 ஆயிரம் எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர் .

    இதுபற்றி அவர் ராமநாதபுரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கியில் இருந்து பாலசுப்பிரமணியன் பணத்தை எடுத்துக்கொண்டு எங்கு சென்றார்? என்பது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அவரை 4 பேர் பின் தொடர்ந்து சென்று பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் கண்டு தேடி வருவதை அறிந்த சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் நேற்று ராமநாதபுரம் வந்து பாலசுப்பிரமணியத்திடம் இருந்து திருடப்பட்ட ரூ.4 லட்சத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுபற்றி போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசிப்பதாகவும், தனது மனைவி வழி உறவினர்களான 3 பேர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து அடிக்கடி வந்து சென்றதாகவும், அவர்கள் முக்கிய ஆவணம் இருப்பதாக கொடுத்த கையில் ரூ.4 லட்சம் இருந்ததாகவும், அது ராமநாதபுரத்தில் பாலசுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவந்ததால் அதனை திருப்பிக் கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதனை கேட்டு வியப்பு அடைந்த போலீசார் அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டனர்.மேலும் அவரிடம் ஆந்திர கொள்ளையர்கள் குறித்த தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கொள்ளையர்களை பிடித்ததும் போலீஸ் நிலையத்தில் வந்து நடந்ததை தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து வந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் மாதவன் (50)அசோக் (55) கிஷோர் (35)என்று தெரியவந்தது.அவர்கள் அடிக்கடி சென்னையில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்று பல இடங்களில் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.இந்த முறை வாடகைக்கு ஆட்டோவை கேட்ட போது, அதனை சர்வீசுக்கு விட்டு இருந்ததால், மோட்டார் சைக்கிளில் அவர்களை அழைத்து வந்ததாக ஆட்டோ டிரைவர் தெரிவித்துள்ளார். அப்போது ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சத்தை அபேஸ் செய்த 3 பேரும் ரூ.50 ஆயிரத்தை எடுத்து கொண்டு மீதி பணத்தை ஒரு பையில் வைத்து அதில் முக்கிய ஆவணம் இருப்பதாகவும், சில நாட்களுக்குப் பிறகு வந்து அதனை வாங்கிக் கொள்வதாகவும் ஆட்டோ டிரைவரிடம் கொடுத்து சென்றுள்ளனர்.

    அப்போது டி.வி.யில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் திருட்டு போன சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காட்டி உள்ளனர். அதில்ஆந்திராவை சேர்ந்த தனது கூட்டாளிகள் 3 பேரும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர், சந்தேகத்தின் பேரில் அவர்கள் கொடுத்த பையை சோதனை செய்து பார்த்தபோது அதில் அவர்கள் அபேஸ் செய்த ரூ.4 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசில் சிக்கி விடுவோம் என்று பயந்த ஆட்டோ டிரைவர் கூட்டாளிகள் அபேஸ் செய்த பணத்தை கொண்டு வந்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.

    இதனிடையே பணத்தை அபேஸ் செய்த ஆந்திர கொள்ளையர்கள் 3 பேரையும் கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலம் நெல்லூர் சென்று கொள்ளையர்களை பிடிக்க அங்குள்ள போலீசாரின் உதவியை கேட்டுள்ளனர். விரைவில் 3 பேரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டால் மேலும் பல தகவல்கள் தெரியவரும்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட பணத்தை கொள்ளையர்களின் கூட்டாளி திரும்ப ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×