என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மேட்டுப்பாளையம்
கூடுதல் டிராபிக் போலீசாரை நியமிக்க கோரிக்கை
சிறுமுகை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் காய்கறி மார்க்கெட், கிழங்கு மண்டி, பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.
மேலும் பிரசித்தி பெற்ற வன பத்ர காளியம்மன் கோவில், பவானி ஆறு உள்ளிட்டவையும் உள்ளது. இதுதவிர மலைகளின் அரசியான நீலகிரிக்கு செல்லும் முக்கிய பாதையாக மேட்டுப்பாளையம் தான் உள்ளது.
மேட்டுப்பாளையம் வந்து தான் நீலகிரி செல்ல வேண்டும். இதனால் எப்போதுமே மேட்டுப்பாளையம் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாகவே காணப்படுகிறது.
பல பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் வருவதால் இங்கு அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி செல்கிறார்கள்.
இதனால், காலை, மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகளும்.தொழிலாளர்கள் பணிக்கு வரும்போதும், வேலை முடிந்து செல்லும்போதும் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
போக்குவரத்தை கட்டுப்படுத்த பஸ் நிலைய ரவுண்டானா, சிறுமுகை ரோடு, ஊட்டி ரோடு ஆற்றுப் பாலம் ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 பணியிடங்கள் உள்ளன. ஆனால் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் மட்டுமே தற்பொழுது பணியில் உள்ளனர்.
போக்குவரத்து காவ லர்கள் பற்றாக்குறையால், தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-மேட்டுப்பாளையம் நகரில், பஸ் நிலையம். சிறுமுகை ரோடு, அன்னூர் ரோடு, அண்ணாஜீ ராவ் ரோடு ஆகிய பகுதிகள் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளாக உள்ளது. பீக் ஹவர்’ எனப்படும், காலை, மாலை நேரங்களில், அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேட்டுப்பாளையம் நகர் முழுவதும் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏதாவது ஒரு கனரக வாகனம் சென்றால் கூட, அதற்கு பின்னால் வரும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. தினமும் நிலவும் போக்குவரத்து நெரிசலால், பணிக்கு செல்வோர், சுற்றுலாவிற்கு செல்வோர். மருத்துவமனைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட காவல் நிர்வாகம், கூடுதல் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்தி, மேட்டுப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story






