என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கார் டீலர் வீட்டில் 17 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் 14 பவுன் நகைகள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கருப்பராயன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 61). கார் டீலர்.
கடந்த 21-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நெக்லஸ், ஆரம், கைச்செயின், செயின் உள்பட 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
30-ந் தேதி இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தங்காத்தாள் என்பவர் செல்வத்தின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் கொள்ளையர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டீலர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
காரமடை அருகே உள்ள பெட்டதாபுரம் வி.சி. நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சந்திர பிரபா (40). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 14 பவுன் தங்க நகைகள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பழனிசாமி கதவு உடைக்கப்பட்டு திறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது. உடனடியாக சம்பவம் குறித்து காரமடை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






